ADDED : ஜன 17, 2026 05:22 AM
பல்லடம்: சாமளாபுரம் பகுதியில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இக்கோவில், பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் பலருக்கு குல தெய்வம் என்பதுடன், தோஷ பரிகாரங்கள் செய்வதற்காகவும், ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், கிராம மக்கள் இக்கோவிலில் குவிந்து விடுகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக கோவிலில் கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. பொங்கல் வைத்தும், தோஷ பரிகாரங்கள் செய்தும் அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், பக்தர்கள் பலர் ரோட்டிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்வதால், கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, மேற்கூரை அமைக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
