/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் திருத்தேர் வெள்ளோட்டம்; அலைகடலென திரண்ட பக்தர்கள்; விண்ணை முட்டிய 'அரோகரா' கோஷம்
/
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் திருத்தேர் வெள்ளோட்டம்; அலைகடலென திரண்ட பக்தர்கள்; விண்ணை முட்டிய 'அரோகரா' கோஷம்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் திருத்தேர் வெள்ளோட்டம்; அலைகடலென திரண்ட பக்தர்கள்; விண்ணை முட்டிய 'அரோகரா' கோஷம்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் திருத்தேர் வெள்ளோட்டம்; அலைகடலென திரண்ட பக்தர்கள்; விண்ணை முட்டிய 'அரோகரா' கோஷம்
ADDED : மே 01, 2025 05:15 AM

திருப்பூர் : நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புதிய தேர்கள் வெள்ளோட்ட திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், 'அரோகரா...' கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பூர், நல்லுாரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், 300 ஆண்டுகள் பழமையானது. கோவில் கும்பாபிேஷகம் நிறைவடைந்த நிலையில், புதிய தேர் வடிவமைத்து, ஆண்டுதோறும் தேர் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. தலைவர் முருகேசன் தலைமையிலான அறங்காவலர் குழு சார்பில், புதிய தேர் வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேலம் தம்பம்பட்டியை சேர்ந்த ஸ்தபதி ரவி குழுவினரால், வேங்கை மற்றும் ஈட்டி மரங்களைக் கொண்டு தேர் வடிவமைக்கும் பணி துவங்கியது. பதினாறு அடி உயர விஸ்வேஸ்வர சுவாமி தேர் மற்றும் ஒன்பது அடி உயர விநாயகர் தேர் வடிவமைக்கப்பட்டது.
புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் சிவாச்சாரியார்கள், யாகவேள்வி பூஜை, வாஸ்துபூஜைகள் நடத்தினர்.
நேற்று, காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், அதைத்தொடர்ந்து புதிய தேர்களுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும் நடந்தது.
களைகட்டிய கலைநிகழ்ச்சி
கயிலாய வாத்திய இசை, கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4:00 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி துவங்கியது.
அலங்கரிக்கப்பட்டதேர்கள்
சுவாமிகள் எழுந்தருள செய்த புனித நீர் அடங்கிய கலசங்கள் தேரின் மீது வைத்து அலங்கரிக்கப்பட்டது. வாழைக்கன்றுகள், நந்தி கொடி, மற்றும் மலர்களால் தேர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிவாச்சார்யார்கள் தேரோட்டத்திற்கான பூர்வாங்க பூஜைகளை செய்தனர்.
தொடர்ந்து, கயிலாய வாத்திய குழுவினர், பெருஞ்சலங்கை ஆட்டம் ஆடும் குழுவினர், ஒயிலாட்டக் குழுவினர், காவடி ஆட்ட குழுவினர் தேரின் முன்பாக ஆடி தேருக்கும் மரியாதை செலுத்தினர்.
மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் கோவிந்தசாமி, அறங்காவலர் குழுவினர், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், எட்டு கிராமங்களை சேர்ந்த கோவில் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். மாலை, 5:20 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டது.5:25 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது; பத்தாவது நிமிடங்களில் கோவில் வளாகத்திற்குள் இருந்த தேர்கள், ரத வீதிக்கு வந்தடைந்தன.
தொடர்ந்து, கைலாய வாத்தியம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், காவடியாட்ட கலைஞர்கள் ஆட்டத்துடன், தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள், 'அரோகரா... அரோகரா...' என்று கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நான்கு வீதிகளில் வலம் வந்த தேர்கள்
நான்கு தேர்வீதிகளில், அசைந்தாடி வந்த தேர்கள், இரவு, 8:00 மணிக்கு நிலையை சென்றடைந்தன. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மகாதீபாராதனை செய்து, தேரோட்டத்தை பூர்த்தி செய்து வைத்தனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த தேர் வெள்ளோட்டம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.