ADDED : ஏப் 08, 2026 08:05 PM
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பறவைக்காவடி, மயில்காவடி, குதிரைக்காவடி, நீதி காவடி என உடல் முழுவதும் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும், அம்மனை வேண்டியும், வேண்டுதல் நிறைவேற்றியதால் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், கிரேன்களில், பறவைக்காவடி, நீதி காவடி, மயில்காவடி, கன்னிமார் காவடி, குதிரைக்காவடி என, பக்தர்கள் வாய், நாக்கில் வேல் குத்தியும், உடம்பில் கொக்கி கொண்டு அலகு குத்தியும், தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்துவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.
நவதானியங்களைக்கொண்டு முளைப்பாலிகை அமைத்து, மகா மாரியம்மன், தேரடி கருப்பணசாமி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, சமயபுரம் மாரியம்மன், திரவுபதியம்மன் என பல்வேறு உருவங்களில், முளைப்பாலிகை அமைத்து, பெண்கள் விரதம் இருந்து, முளைப்பாலிகையை ஊர்வலமாக, கோவிலுக்கு எடுத்து வந்து, மகா சக்தி மாரியம்மனை வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
