/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலய மதில் சுவரை ஒட்டி கழிப்பிடம் வாஸ்து தோஷமென பக்தர்கள் அதிருப்தி
/
சிவாலய மதில் சுவரை ஒட்டி கழிப்பிடம் வாஸ்து தோஷமென பக்தர்கள் அதிருப்தி
சிவாலய மதில் சுவரை ஒட்டி கழிப்பிடம் வாஸ்து தோஷமென பக்தர்கள் அதிருப்தி
சிவாலய மதில் சுவரை ஒட்டி கழிப்பிடம் வாஸ்து தோஷமென பக்தர்கள் அதிருப்தி
ADDED : மே 24, 2025 11:13 PM

திருப்பூர்: வாஸ்து முறைகளுக்கு முரணாக, விஸ்வேஸ்வர சுவாமி கோவில் அருகே கழிப்பிடம் கட்டுவதை தடுக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போதிய கழிப்பறை வசதி இல்லை. அறங்காவலர் குழு முயற்சியால், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி, 17 லட்சம் ரூபாயில், பொதுக்கழிப்பிடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
கோவிலின் வடபுறம் உள்ள, குஜராத்தி மண்டபம் செல்லும் ரோட்டின் ஓரமாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில், பொதுக்கழிப்பிட பணி துவங்கியது. மாநகராட்சி மூலமாக, அப்பகுதிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவிலின் வடமேற்கு பகுதியில் உள்ள மதில்சுவரை ஒட்டிகழிப்பிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவில் மதில்சுவரை ஒட்டி கழிப்பிடம் கட்டக்கூடாது; மாற்றி அமைக்க வேண்டுமென, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திருக்கோவில் திருத்தொண்டர்கள் பேரவை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், 'சிவன் கோவிலை ஒட்டி, மாநகராட்சி மூலமாக கழிப்பிடம் அமைப்பதால், ஈசானியம் குறுகி, வடக்கு வாவியம் வளர்ந்து காணப்படுகிறது; இது, வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்; திருப்பூருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமென, வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, கோவில் மதில் சுவரில் இணைந்தபடி இல்லாமல், கழிப்பிடத்தை மாற்றி அமைக்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ''பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கோவில் மதில் சுவருடன் இணையாதபடி, கழிப்பிடத்தை கட்டுமாறு, மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தியுள்ளோம்; விரைவில், கழிப்பிட கட்டுமானம் மாற்றி அமைக்கப்படும்,'' என்றார்.