/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீரிழிவு நோய்; வருமுன் காப்பதே சிறந்தது
/
நீரிழிவு நோய்; வருமுன் காப்பதே சிறந்தது
ADDED : ஜூன் 26, 2025 11:54 PM

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பொது மருத்துவத்துறை சிறப்பு மருத்துவர் முத்துசாமி கூறியதாவது:நீரிழிவு நோய் ஒரே நாளில் வருவதல்ல. நோய் என்று சொல்வதை விட, அறிகுறி என்பதே சரி. ஆரம்ப நிலையில் அறிகுறிகளை கண்டறிந்து விட்டால், சிகிச்சை முறைகளை துவக்கி விட்டால், மருந்து, மாத்திரை தவிர்த்து உணவு முறைகளில், நோய் உடலில் பரவமால் தடுத்திட முடியும். ஒருவரது உடல், மரபு, சுற்றுப்புறச்சூழல், மனம் உள்ளிட்டவை தான் சர்க்கரை நோய் நிலையில் இருந்து அறிகுறிகளை காண்பித்து, நீரிழிவு நோயை துவங்குகிறது.
பெற்றோர் மரபு வழியில், 25 - 75 சதவீதம் தொடர வாய்ப்புள்ளதால், தாய், தந்தையருக்கு நீரிழிவு கண்டறியப்பட்டால், குழந்தைகளாக இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடற்பயிற்சி குறைவு, மன அழுத்தம், ஓய்வு - துாக்கம் இல்லாதது, இரவு தாமதமாக மாவுச்சத்து நிறைந்த பொருட்களை உண்பது, கூடுதல் இனிப்பு எடுத்துக் கொள்வது போன்றவை கூடாது.
கீரை, காய்கறிகளை உண்ணலாம். பயறு வகை சாப்பிடலாம். பாஸ்ட்புட் உணவு ஆபத்து. உடலில் உள்ள அதிக கொழுப்பால், நீரிழிவு வர வாய்ப்புள்ளது; உடலில் சேரும் கொழுப்பை தவிர்க்க வேண்டும். உணவு முறை சரியாக இல்லை என்றால் உடனே தெரியாது. ஐந்து ஆண்டு, பத்தாண்டு, 30 ஆண்டு கழித்து கூட தெரிய வரும். உணவில் கவனம் மிகமிக அவசியம்.நீரிழிவு நோய் ஒரே நாளில், '220'ல் இருந்து, '420'க்கு வராது. படிப்படியாக தான் உயரும். ஒவ்வொருவரும் 'ப்ரீ டயாபடிக்' நிலையை கண்டறிந்து விட்டால், நீரிழிவு நோயும் குணப்படுத்தக்கூடியது தான். பெரும்பாலோனார் அவ்வாறு செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் தான், உடல் உறுப்புகள் பாதிக்கிறது. இரண்டாவது நிலையில் உடல் சோர்வு ஏற்படும்; உடல் எடை குறையும்; அதிகப்பசி எடுக்கும்; சிறுநீர் அதிகமாக வெளியேறும். இந்நிலையை தாண்டும் போது தான் கண் பார்வை குறைவு, கண் எரிச்சல், கால் எரிச்சல், மதமதப்பு, கால் புண் ஆறாத நிலை ஏற்படும்.நீரிழிவு நோயால் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. முன்கூட்டியே நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
- இன்று(ஜூன் 27) உலக நீரிழிவு தினம்.