ADDED : ஜூலை 27, 2025 09:16 PM

உடுமலை; விளைபொருட்களை காய வைக்க, உலர் களம் இல்லாததால், நரசிங்காபுரம் சுற்றுப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
மடத்துக்குளம் தாலுகா நரசிங்காபுரம் சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்று பாசனத்துக்கு, பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
இதில், மக்காச்சோளம், சோளம் மற்றும் இதர தானியங்களை அறுவடை செய்த பிறகு, காய வைத்து விற்பனை செய்ய வேண்டும். இதற்கான உலர்களம் அப்பகுதியில் இல்லை.
இதனால், ரோடுகளிலும், தனியார் களங்களிலும் தானியங்களை காய வைத்து, விற்பனை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். சில விவசாயிகள், நான்கு வழிச்சாலையில், ஆபத்தான முறையில் தானியங்களை காய வைக்கின்றனர்.
அறுவடை சீசனில் உலர்களத்துக்காக பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளதால், மிகுந்த சிரமப்படுகின்றனர். தென்னை சாகுபடி பரப்பு கணிசமாக இருந்தும், கொப்பரையும் உற்பத்தி செய்ய முடிவதில்லை.
விவசாயிகள் கூறியதாவது: தானியங்களை இருப்பு வைக்கவும், தரம் பிரித்து விற்பனை செய்யவும் உலர்களங்கள் முக்கிய தேவையாக உள்ளது.
சிறு, குறு விவசாயிகள், மடத்துக்குளம், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு, விளைபொருட்களை எடுத்து செல்ல கூடுதல் செலவாகிறது. எனவே, நரசிங்காபுரம் பகுதியில், உலர்களம் கட்டித்தர வேண்டும்.
இதனால், தானியங்கள் மட்டுமல்லாது, கொப்பரையும் உற்பத்தி செய்ய முடியும். ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண்துறையினர் உலர் களம் கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.