/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாதையில் திக்... திக்... பயணம்; பராமரிப்பு இல்லாமல் பயம்
/
சுரங்க பாதையில் திக்... திக்... பயணம்; பராமரிப்பு இல்லாமல் பயம்
சுரங்க பாதையில் திக்... திக்... பயணம்; பராமரிப்பு இல்லாமல் பயம்
சுரங்க பாதையில் திக்... திக்... பயணம்; பராமரிப்பு இல்லாமல் பயம்
ADDED : ஜூலை 11, 2025 11:50 PM

உடுமலை,; தளி ரோடு மேம்பால சுரங்கப்பாதையில் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டிய நிலை உள்ளது.
உடுமலை - தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகே, அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. அவ்விடத்தில், ரயில்வே கடவு எண் - 95 கேட்டுக்கு பதிலாக மேம்பால பணிகள், 2009ல், துவக்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் அணுகுசாலையும், மறுபக்கத்தில், சுரங்கப்பாதையும் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப்பிறகு ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நகரில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள், ராமசாமி நகர் ரயில்வே கேட் வழியாக செல்லாமல், சுரங்கப்பாதை வழியாகவே செல்கின்றன.
காலை, மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் மேம்பாலம் அருகிலுள்ள மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு, அதிகளவு வாகனங்கள் சுரங்கப்பாதை வழியாக செல்கின்றன.
ஆனால், இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. மழைக்காலத்தில், தாழ்வான ஓடுதளத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மோட்டார் அமைக்கப்பட்டாலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது.
இதனால், ஓடுதளம் மழைக்காலத்துக்கு பிறகு குண்டும், குழியுமாக மாறி விடுகிறது. மெகா குழிகள் ஏற்படுவதால், அதில் இறங்காமல் தவிர்க்க, குறுகலான இடத்தில், வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
மழைநீர் உள்ளே வருவதை தவிர்க்க, மேற்கூரை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் உள்ளே இரவு நேரங்களில் விளக்குகளும் எரிவதில்லை.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால், திக்... திக்... பயத்துடன் வாகன ஓட்டுநர்கள் சுரங்கப்பாதை வழியாக செல்கின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, மேற்கூரை அமைத்து, ஓடுதளத்தை சீரமைத்து, பக்கவாட்டு சுவரின் விரிசலில், கசிவு நீர் வராமல் தடுக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொண்டால், வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

