/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசாருக்கு "பஞ்சிங்' அடையாள அட்டை
/
போலீசாருக்கு "பஞ்சிங்' அடையாள அட்டை
ADDED : செப் 23, 2011 10:03 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு 'பஞ்சிங்' முறையில் பயன்படுத்தும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.மாவட்ட காவல் துறை சார்பில் போலீசாருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது; போலீசாரின் புகைப்படம், பெயர், முகவரி மற்றும் எண், ரத்த வகை; பணிபுரியும் பகுதி உள்ளிட்ட விவரங்களுடன், அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
அவற்றை 50 போலீசாருக்கு எஸ்.பி., பாலகிருஷ்ணன் வழங்கினார். போலீசாரின் வருகை பதிவை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் பகல் மற்றும் இரவு ரோந்து செல்லும் போலீசார், அவர்கள் செல்லும் 'பீட்'களில், 'பஞ்சிங்' முறையில் வருகையை பதிவு செய்யும் வகையில், அடையாள அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையை எடுத்துச் செல்லும் போலீசார், போலீஸ் ஸ்டேஷன்கள், 'பீட்' செல்லும் இடங்களில் உள்ள வருகைப்பதிவு இயந்திரங்களில் காட்டி, 'பஞ்சிங்' முறையில், தங்களது வருகையை பதிவு செய்யலாம். எஸ்.பி., அலுவலகத்தில், 'மானிட்டரிங்' திரையில், மாவட்ட போலீசாரின் வருகை குறித்த முழு விவரங்களையும், உயரதிகாரிகள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முதல்கட்டமாக அடையாள அட்டை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது; இரண்டாம் கட்டமாக, விடுபட்ட போலீசாருக்கு அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில், போலீசாரை புகைப்படம் எடுக்கும் பணி நடக்கிறது.