/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை:மேற்பார்வையாளர் கைது
/
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை:மேற்பார்வையாளர் கைது
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை:மேற்பார்வையாளர் கைது
மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை:மேற்பார்வையாளர் கைது
ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
திருப்பூர் : மதுபாட்டிலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த, படியூர் 'டாஸ்மாக்' மதுக்கடை மேற்பார்வையாளரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்; தப்பியோடிய விற்பனையாளர் குறித்து விசாரிக்கின்றனர்.
'டாஸ்மாக்' மண்டல முதுநிலை மேலாளர் மகேஸ்வரன், திருப்பூர் மாவட்ட மேலாளர் செல்வன் அமல்ராஜ் மற்றும் 'டாஸ்மாக்' அலுவலர்கள், குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கயம் மற்றும் படியூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். படியூரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் (எண் 3883), அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, 24 'குவார்ட்டர்' பாட்டில்கள் மற்றும் 12 'ஆப்' பாட்டில்களில் மதுபானத்தில் பாதியளவுக்கு, தண்ணீர் கலந்து விற்பது தெரிந்தது. மாவட்ட மேலாளர் செல்வன் அமல்ராஜ், காங்கயம் மதுவிலக்கு போலீசில் புகார் செய்தார். கடை மேற்பார்வையாளர் காங்கயத்தை சேர்ந்த ரமேஷை (38), போலீசார் கைது செய்தனர். அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, கடையில் இருந்து தப்பியோடிய, வீரசோழபுரத்தை சேர்ந்த நந்தகோபால், கடையின் மற்றொரு விற்பனையாளர் சிவன்மலை சின்னாயிபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தண்ணீர் கலந்த மதுபான பாட்டில்களை, மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.'டாஸ்மாக்' மேலாளர் செல்வன் அமல்ராஜ் கூறுகையில்,''பேனா நிப்பிளை பயன்படுத்தி, மதுபாட்டில் மூடியை லாவகமாக திறந்து, மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்கப்பட்டுள்ளது; பாட்டிலில் உள்ள மதுவில், ஆல்கஹால் அளவு குறைந்திருப்பதை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, மதுபாட்டில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது,'' என்றார்.இரு நாட்களுக்கு முன், திருப்பூர் பெரியார் காலனியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற கடை விற்பனையாளர், பார் உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த அக்கடை மேற்பார்வையாளர் கணேசனும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.