/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை பெற கட்டுப்பாடு : ஆய்வு செய்தபின் வழங்க உத்தரவு
/
கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை பெற கட்டுப்பாடு : ஆய்வு செய்தபின் வழங்க உத்தரவு
கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை பெற கட்டுப்பாடு : ஆய்வு செய்தபின் வழங்க உத்தரவு
கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை பெற கட்டுப்பாடு : ஆய்வு செய்தபின் வழங்க உத்தரவு
ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தொகையை தலா 4,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அரசு மருத்துவ மனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, கர்ப்பிணி பெண்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களின் பொருளாதார நிலையை கண்டறிந்து, பரம ஏழையாக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்க வேண்டும் என 'கறாரான' உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகளால், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை தவிர்த்து தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லும் கர்ப்பணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 'அல்ட்ரா ஸ்கேனிங்' வசதி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தியுள்ள போதிலும், கர்ப்பிணிகள் வருகை அதிகரிக்கவில்லை. ஏனெனில், 24 மணி நேர தொடர் கண்காணிப்பு, செவிலியர், டாக்டரின் தனிப்பட்ட அரவணைப்பு ஆகிய காரணங்களால், தனியார் மருத்துவமனைகள் பக்கமே கர்ப்பிணிகள் செல்கின்றனர். அதிக பணம் செலவு செய்து புலம்பித் தவிக்கும் பரம ஏழைகளுக்கு, அரசு தரப்பில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுநாள் வரை, 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, இனி 12,000 ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள் ளது. வரும் ஆண்டில் இத்தொகையை பயனாளிகளுக்கு சரியான முறையில் வழங்குவது; கூடுதலாக கர்ப்பிணிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரவழைப்பது; சிறப்பாக சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். அதன் பின், அதிகாரிகளுக்கு சில வரைமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறியதாவது: கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பதற்கு எட்டு மாதங்களுக்கு முன் 4,000 ரூபாய், பிறந்ததும் 4,000 ரூபாய், குழந்தை பிறந்த மூன்று மாதத்துக்கு பின், 4,000 ரூபாய் வழங்கும்படி கூறியுள்ளனர்.கடந்த தி.மு.க., ஆட்சியில் சிபாரிசு அடிப்படையில் வரும் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது, இம்முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதி பெற விரும்புவோரின் குழந்தை கட்டாயம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது அரசு மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில், வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குழந்தை பிறந்திருக்க வேண்டும்.குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு சொந்தமாக ஓட்டு வீடு கூட இருக்கக்கூடாது; டூவீலர் வைத் திருக்க கூடாது; கட்டாயம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக, பரம ஏழைகளாக இருக்க வேண்டும் என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் வீட்டுக்கும் நேரில் சென்று சுகாதார ஆய்வாளர் ஆய்வு நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தவறான முறையில் நிதி ஆதாரம் பயன்பட்டு விடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.