sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களின் திறனை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது! சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர், பெற்றோர் கருத்து

/

மாணவர்களின் திறனை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது! சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர், பெற்றோர் கருத்து

மாணவர்களின் திறனை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது! சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர், பெற்றோர் கருத்து

மாணவர்களின் திறனை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது! சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர், பெற்றோர் கருத்து


ADDED : ஆக 11, 2011 11:07 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மாணவர்களின் திறனுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு இல்லாமல், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்,' என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள்: சண்முகானந்தன், கணித ஆசிரியர், கிட்ஸ் கிளப் பள்ளி: மெட்ரிக், சமச்சீர் என இரண்டு பாடத் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து சிறந்தது எது என சொல்வதை விட, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகளில் கணிதம் முதல் தாள், இரண்டாம் தாள் என தேர்வில் வரும். ஆனால், இனி எப்படி மாறப்போகிறது என தெரியவில்லை. இதுபோன்ற தேர்வுகள் சார்ந்த புதிய தகவல்களை அரசு வெளியிட வேண்டும். இரண்டு மாதம் தாமதமானாலும், சிறப்பு வகுப்பு மூலம் பாடங்களை விரைந்து முடித்து விடலாம்; பிரச்னை இருக்காது. சுரேஷ், அறிவியல் ஆசிரியர், பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளி: சில பாடப்பகுதிகள் எளிமையாக அமைந்துள்ளன. பழைய பாடத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பில் இருந்து சில பாடங்கள், ஒன்பது, எட்டாம் வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், முக்கிய வினாக்கள், கேள்வித்தாள் 'பேட்டர்ன்', 'புளூ பிரிண்ட்', செய்முறை தேர்வு சார்ந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். கடுமையான பகுதிகள் இல்லை; மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடங்கள் எளிமையாக உள்ளன.மூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு: ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வியே எதிர்கால சமூகத்துக்கு பயன்தரக்கூடியது; இதில், ஏற்றத்தாழ்வு நீடிக்கக்கூடாது. குழந்தை களுக்கு சமச்சீர் கல்வி அவசியம். பாடப்புத்தகம் என்பது விளம்பர பலகையாக இருப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. அதில், தரமான பாடங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. உடனடியாக புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜோசப், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி: காலாண்டு தேர்வு வர இருப்பதால், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், அனைத்து பாடப்புத்தகமும் உடனடியாக வழங்க வேண்டும். பாடங்களை கையாள, ஆசிரியர்களுக்கும் பயிற்சி அவசியம். கண்ணன், பெற்றோர், பெருமாள் கோவில் வீதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் வரவேற்கிறோம். இரு மாதங்களாக பாடப்புத்தகம் இன்றி மாணவர்கள் தவித்து வந்தனர். வரும் நாட்களில் அவசரமாக பாடங்களை மாணவர்களுக்கு திணிக்காமல், அவர்களின் மனநிலைக்கு ஏற்ப நடத்த வேண்டும். கல்வி மாணவர்களின் அடிப்படை உரிமை; அது, பாதிக்காமல் இருப்பது அவசியம். மாணவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வியில் வாய்ப்பு தர வேண்டும். அதை கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். நடராஜன், பெற்றோர், பூச்சக்காடு: சமச்சீர் கல்வி என்பது நல்லது. என் மகள் தனியார் பள்ளியில் படித்தாலும், வரவேற்கிறேன். சில குறைகள் இருக்கின்றன என சொல்கின்றனர். அதை நிவர்த்தி செய்து, அடுத்து வரும் ஆண்டுகளில் மேல்நாட்டு கல்விக்கு இணையாக பாடப்புத்தகத்தின் தரத்தை உயர்த்த அரசு முயற்சிக்க வேண்டும். சுதா, பெற்றோர், சிவசக்தி நகர்: என் மகள் மாநகராட்சி பள்ளியில் படிக்கிறாள். இனி, எல்லா பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கினால் நல்லது தான். அரசு பள்ளிகளில், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தெளிவாக பாடங்களை சொல்லித்தர வேண்டும். ஆசிரியர்களே, மாணவர்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறார்கள்.சுப்ரமணியன், பெற்றோர், திருப்பூர்: மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டியது, அரசின் கடமை. பாடத்தில் ஏதாவது குறை இருந்தால், அதை சரி செய்ய வேண்டும். இனி, எல்லா விடுமுறை நாட்களிலும் வகுப்பு நடத்தி, மாணவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது. தேர்வுகளை சில நாட்களுக்கு தள்ளிவைக்கலாம். நேரம் இல்லை என பாடங்கள் நடத்தாமல் முக்கிய பகுதிகளை மட்டும் நடத்தக்கூடாது. புத்தகத்தில் உள்ள கல்வியை மாணவர்களுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டும்.கலா, பெற்றோர், வாலிபாளையம்: கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை; சட்டமாக கூட கொண்டு வரப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு மாதங்கள் படிக்காமல் ஜாலியாக இருந்த மாணவர்கள், இனி அதிகமாக படிக்க சிரமப்படுவர். எனவே, அதிக சுமையாக மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது. இது, மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வாறு, பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us