ADDED : ஆக 14, 2011 10:31 PM
அவிநாசி : அவிநாசி அருகே அரசு பஸ் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டது.அவிநாசியில் இருந்து கருணைபாளையம், கவுண்டம்பாளையம், வெங்கமேடு வழியாக 'ஏ7' என்ற அரசு டவுன் பஸ் பல்லடம் வரை செல்கிறது.
அந்த பஸ், கவுண்டம்பாளையம் வழியே செல்லாமல், மங்கலம் ரோடு வழியாக செல்வதால், அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இரு நாட்களுக்கு முன், அந்த பஸ்சை, கவுண்டம்பாளையம், கருணைபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்த ஒன்றிய குழு துணைத்தலைவர் வடி வேல், போக்குரவத்து அதிகாரிகளிடம் பேசினார். அதிகாரிகள் தரப்பில், 'கவுண்டம்பாளையம் வழியாக பஸ் கண்டிப்பாக செல்லும்,' என்று உறுதி அளித்ததால், அன்றைய தினம் பஸ் விடுவிக்கப்பட்டது. அதே பஸ், நேற்று முன்தினமும், நேற்றும் கவுண்டம்பாளையத்திற்கு செல்லவில்லை. இதை கண்டித்து நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு வெங்கமேட்டுக்கு வந்த பஸ்சை மக்கள் சிறைபிடித்தனர். ஒன்றியக்குழு துணை தலைவர், சம்பவ இடத்துக்கு சென்று, மீண்டும் அதிகாரிகளிடம் பேசினார். அதையடுத்து பஸ் கவுண்டம்பாளையம் சென்றது. பொதுமக்கள் கூறுகையில், 'கவுண்டம்பாளையம், கருணைபாளையம் கிராம மக்களை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தினர் அலட்சியப்படுத்துகின்றனர். பஸ் வராத காரணம் குறித்து கேட்டால், ரோடு சரியில்லை என்கின்றனர். சமீபத்தில்தான் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரோடு செப்பனிடப்பட்டுள்ளது. இனியும் பஸ் வரவில்லை என்றால் போராட்டத்தை தீவிரமாக்குவோம்,' என்றனர்.