/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமீறல் :அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
/
வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமீறல் :அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமீறல் :அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமீறல் :அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
ADDED : செப் 18, 2011 09:35 PM
திருப்பூர் : வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை முறைப்படுத்த, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்
இருப்பதால், திருப்பூரில் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் தாறுமாறாக
எழுதப்படுவது தொடர்கிறது. மத்திய மோட்டார் வாகன சட்டம் 50, 51 விதிகளை
பின்பற்றி, வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருக்க வேண்டும்;
டூவீலர்களில் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., அகலம்; இலகுரக வாகனத்தில் 340
மி.மீ., நீளம், 200 மி.மீ., அகலம்; பயணிகள் வாகனத்தில் 500 மி.மீ., நீளம்,
120 மி.மீ., அகலம் என வரையறுக்கப்பட்டுள்ளது.டூவீலர் மற்றும் கனரக
வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் எழுதப்படும் எண்கள், தெளிவாக 'பளிச்'சென
தெரிய வேண்டும். நம்பர் பிளேட்டுகள், கனரக வாகனங்களிலும், டூவீலர்களிலும்
குறிப்பிட்ட அளவுகளில் இருக்க வேண்டும்; எண்களை தவிர, நம்பர் பிளேட்டுகளில்
வேறு எதையும் எழுதியிருக்கக் கூடாது; எண்களை முழுமையான வடிவில்
எழுதியிருக்க வேண்டும்; கோணல் மாணலாகவும், வித்தியாசப்படுத்தியும்
எழுதியிருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூரில் ஓடும்
பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல் தொடர்கிறது; பல
விதங்களில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. சில எண்கள் ஆங்கில வடிவில்
மாற்றப்பட்டுள்ளன. பல வாகனங்களில், எண்கள் சிறியதாகவும், கட்சி பெயர்கள்,
சின்னங்கள் பெரிய அளவிலும் வரையப்பட்டுள்ளன. கவிதை வாசகங்கள், பல நம்பர்
பிளேட்டுகளில் காட்சியளிக்கின்றன. சில வாகனங்களில் முன்பக்கம் மட்டுமே
நம்பர் பிளேட்டுகள் உள்ளன; பின்புறத்தில் இருப்பதில்லை. நம்பர்
பிளேட்டுகளில் தொடரும் விதிமீறல்களை தடுக்கவும், கண்காணித்து நடவடிக்கை
எடுக்காமல், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் 'குளுகுளு' அறையில் முடங்கிக்
கிடக்கின்றனர். இதனால், புதிய வாகனங்களில் நம்பர் எழுதும்போதும்
தயக்கமின்றி விதிமீறல் தொடர்கிறது. விபத்து மற்றும் அவசர நேரங்களில், வாகன
எண்கள் பலவிதங்களிலும் உதவ வாய்ப்புள்ளதால் நம்பர் பிளேட்டுகள்
பொருத்தப்படுகின்றன. அதை விளையாட்டாக, குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும்
விதமாக பலரும் செய்து விதிமீறுகின்றனர். திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ.,
ரஜினிகாந்திடம் கேட்ட போது, ''இம்மாதம் 30ம் தேதி வரை, நம்பர் பிளேட்
குளறுபடி, ஏர்ஹாரன், புகை மாசு உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து சிறப்பு
சோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது; சிறப்பு சோதனை நடத்தி, விதிமீறல்
வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.