/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறக்கப்படாத ரேஷன் கடை :தொடரும் மக்கள் அவதி
/
திறக்கப்படாத ரேஷன் கடை :தொடரும் மக்கள் அவதி
ADDED : செப் 23, 2011 10:00 PM
திருப்பூர் : 'இடுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும்,' என, பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகம்பாளையம் ஊராட்சியில் உள்ள இடுவம்பாளையம்
கிராமத்தில், 1,600 கார்டுகளுடன் ரேஷன் கடை (எல்.பி.,052) செயல்பட்டு
வருகிறது. அதிகப்படியான கார்டுகள் இருப்பதால், பொருள் வினியோகத்தில்
பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், கார்டுகளை பிரித்து, புதிய கடை துவக்க
வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து
வருகின்றனர். அதன்படி, இடுவம்பாளையம் கடையில் உள்ள கார்டுகளை பிரித்து,
புதிய முழு நேர கடை திறக்க உத்தரவிடப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தின்
ஏற்பாட்டின்படி, இடுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில்
உள்ள கட்டடத்தில், ரேஷன் கடை அமைக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த
நிகழ்ச்சியில், பல்லடம், எம்.எல்.ஏ., பரமசிவம், அக்கடையை திறந்து
வைத்தார்.ஒரு மாதத்துக்கு மேலாகியும், புதிதாக திறக்கப்பட்ட ரேஷன் கடை
பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், இடுவம்பாளையம் ரேஷன் கடையில்,
பொதுமக்களின் சிரமங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோல், குளத்துக்கடை
பகுதியில் பிரிக்கப்பட்ட ரேஷன் கடைக்காக, லிட்டில் பிளவர் கான்வென்ட்
அருகில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. இருப்பினும், புதிய கட்டடத்தில் கடை
செயல்படுவதில் இழுபறி நீடிக்கிறது.மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள்
தலையிட்டு, கட்டடங்கள் திறக்கப்பட்டும், செயல்படாமல் உள்ள ரேஷன் கடையை
செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.பல பகுதிகளில், புதிய ரேஷன் கடை அமைக்க கட்டட வசதி இல்லாமல்
சிரமப்படும்போது, கட்டடத்தை ஏற்பாடு செய்து கொடுத்த பிறகும், கடையை
செயல்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது பொதுமக்கள் இடையே
அதிருப்தியை உருவாக்கிஉள்ளது.