/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
21 ஆயிரம் வாக்காளரிடம் நேரடி விசாரணை
/
21 ஆயிரம் வாக்காளரிடம் நேரடி விசாரணை
ADDED : ஜன 03, 2026 06:21 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர். படிவத்தில், முந்தைய 2002 விவரங்கள் குறிப்பிடாத 21 ஆயிரம் வாக்காளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கூடுதல் ஆவணங்கள் பெறும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக நேரடியாக வாக்காளரை சந்தித்து அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிச. 19 ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு தொகுதிகளிலும், இறந்த, இரட்டை பதிவு, எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்ப்பிக்காத 5.63 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன; 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 பேர், வாக்காளராக வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது, எஸ்.ஐ.ஆர். படிவத்தில், 2002 விவரங்களை குறிப்பிடாத வாக்காளர்களுக்கு, பி.எல்.ஓ.க்கள் வாயிலாக, கூடுதல் ஆவணங்களை பெறுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுவருகிறது. எட்டு தொகுதிகளிலும், 2002 விவரங்கள் குறிப்பிடாத 21 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
153 அலுவலர் நியமனம்
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், வாக்காளர்களிடமிருந்து கூடுதல் ஆவணம் பெற்று விசாரணை நடத்துவதற்காக, வாக்காளர் பதிவு அலுவலருக்கு கீழ், தாசில்தார், பி.டி.ஓ., நிலையிலான அதிகாரிகள், நியமிக்கப்பட்டுள்ளனர். எட்டு தொகுதிகளுக்கும், கூடுதல் ஆவணம் பெறுவதற்காக, மொத்தம் 153 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல், சட்டசபை தொகுதி வாரியாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட வாக்காளர்களிடமிருந்து, கூடுதல் ஆவணம் பெறும் பணிகள் துவங்கியுள்ளன.
ஆவணம் அளிக்க வேண்டும்
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
நோட்டீஸ் கிடைக்கப்பெற்றோர், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அதிகாரியை நேரில் அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
1987 முதல் 2004க்குள் பிறந்த வாக்காளர், தனது சுய ஆவணம் மற்றும் அம்மா அல்லது அப்பா யாரேனும் ஒருவரின் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். 2004க்கு பின் பிறந்த வாக்காளர், தனது சுய ஆவணம் மற்றும் அம்மா, அப்பா ஆகிய இருவரின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார், அடையாள ஆவணமாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே ஆதாருடன், வாக்காளர் தனது சுய கல்விச் சான்று மற்றும் பெற்றோரின் கல்விச் சான்று ஆகியவற்றை ஆவணமாக வழங்கலாம். கல்விச்சான்று இல்லாதோர், கவலைப்படவோ, குழப்பம் அடையவோ தேவையில்லை; கல்விச்சான்றுக்கு பதிலாக இருப்பிடச்சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

