/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானாவாரி தானியங்கள் சாகுபடியை காப்பாற்ற நேரடி கொள்முதல்!: கண்டுகொள்ளாத அரசால் விவசாயிகள் கவலை
/
மானாவாரி தானியங்கள் சாகுபடியை காப்பாற்ற நேரடி கொள்முதல்!: கண்டுகொள்ளாத அரசால் விவசாயிகள் கவலை
மானாவாரி தானியங்கள் சாகுபடியை காப்பாற்ற நேரடி கொள்முதல்!: கண்டுகொள்ளாத அரசால் விவசாயிகள் கவலை
மானாவாரி தானியங்கள் சாகுபடியை காப்பாற்ற நேரடி கொள்முதல்!: கண்டுகொள்ளாத அரசால் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 26, 2026 05:10 AM

உடுமலை: வடகிழக்கு பருவமழைக்கு பிரத்யேகமாக சாகுபடி செய்யப்படும் கொண்டைக்கடலை, கொத்தமல்லி, மொச்சை உள்ளிட்ட தானியங்களை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. நிலையான விலை கிடைக்காமல் ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு சரிந்து வருகிறது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, ஆண்டுதோறும் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், கொண்டைக்கடலை மற்றும் கொத்தமல்லி மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
இந்த இரு சாகுபடிகளும், களிமண் விளைநிலங்களில், மட்டும் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கொண்டைக்கடலையானது கருப்பு சுண்டல், கடலை மாவு என உணவு சார்ந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. முன்பு இப்பகுதியில் விளையும் கொண்டைக்கடலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, அறுவடை தருணத்தில், விலை சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைந்தனர். ஏக்கருக்கு, 800 கிலோ வரை கிடைத்து வந்த மகசூலும் குறைந்து, விலையும் கிடைக்கவில்லை.
விதைப்பின் போது கிலோ, 55 ரூபாயும், அறுவடையின் போது, 40 ரூபாயாகவும் விலை சரிந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
கொண்டைக்கடலைக்கு ஆதார விலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்ய வேண்டும்; அரசுப்பள்ளிகளில் சுண்டல் வழங்கினால், மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இதனால், ஆண்டுதோறும் கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிந்துள்ளது. இரு வட்டாரங்களிலும், 5 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு கூட இச்சாகுபடிக்கு விதைப்பு செய்யப்படுவதில்லை.
இதே போல், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான ஜல்லிபட்டி சுற்றுப்பகுதிகளிலும், மலைவாழ் கிராமமான ஈசல் திட்டு உள்ளிட்ட பகுதிகளிலும், மானவாரியாக மொச்சை பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
பொங்கல் சீசனில் அறுவடை செய்யப்படும் மொச்சை நுாறு கிலோ கொண்ட மூட்டை முன்பு 12 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, மூட்டை விலை 4 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது.
ஏக்கருக்கு சாகுபடி செலவு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ள நிலையில், தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், மொச்சை சாகுபடியை கைவிட துவங்கியுள்ளனர்.
ஆதார விலை நிர்ணயிக்கணும் விவசாயிகள் கூறியதாவது: விளைநிலங்களில், கிணறு, போர்வெல் உள்ளிட்ட பாசன வசதிகள் எதுவும் இல்லாத மானாவாரி நிலங்கள் உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் அதிகளவு உள்ளது.
இந்நிலங்களில், வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்படும் சாகுபடிக்கு மட்டுமே அவ்விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது.
கொண்டைக்கடலை, மொச்சை, கொத்தமல்லி, பாசிப்பயறு, துவரை உள்ளிட்ட தானியங்கள் மட்டுமே மானாவாரி விளைநிலங்களின் முக்கிய சாகுபடியாக இருந்தது. இந்த சாகுபடிகளில், அறுவடையின் போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் தொடர் நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழக அரசு அறுவடை சீசனில், ஆதார விலை நிர்ணயித்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தானியங்கள் சாகுபடியை முற்றிலுமாக கைவிடும் நிலை ஏற்படும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

