ADDED : ஜூலை 11, 2026 06:43 AM
திருப்பூர்: தேவையான உதவிகள் வீடு தேடி செல்லும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 18 ம் தேதி முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு துவங்கும்; அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து சேவைகளும், வீடுகளுக்கே சென்றடையும் வகையில், 18ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. கணக்கெடுப்பாளர், வீடுதேடி வரும் போது, அனைத்து தகவல்களையும் அளிக்க வேண்டும். வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஆவணங்களை அளித்து உதவ வேண்டும்.
தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசு நலத்திட்ட உதவிகளும், ஓரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கிணைந்த சமூக சேவை மையமாக, 'விழுதுகள்' மையம் செயல்படும். மொத்தம் உள்ள, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற இந்த திட்டம் உதவுகிறது. வருவாய் கோட்ட அளவில் மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மையங்களில், 'பிசியோதெரபி', தொழில்முறை சிகிச்சை, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகள் இலவசமாக வழங்கப்படும். அரசு நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் பெறலாம். மத்திய அரசு அடையாள அட்டைக்கும் (யு.டி.ஐ.டி.,) விண்ணப்பிக்கலாம்.
உளவியல் ஆலோசனை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான பயிற்சி உட்பட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர, 23 வட்டாரங்களிலும், வட்டார அளவிலான 'விழுதுகள்' ஒருங்கிணைந்த சமூக சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கரடிவாவி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடிமங்கலம், கணியூர், (மடத்துக்குளம்) ஆகிய நான்கு இடங்களில் மையங்கள், இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
இம்மையங்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உளவியல் ஆலோசனை, பிசியோதெரபி, சிறப்புக் கல்வி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை ஆகிய நான்கு வகையான மறுவாழ்வு சேவைகள் அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்கப்படும். இத்திட்டத்தில், 242 முன்களப் பணியாளர்கள், கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, சமூக தரவுகள் கணக்கெடுப்பு செய்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து, தேவையான உதவியை செய்வர்.
கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 'விழுதுகள்' ஒருங்கிணைந்த சேவை மையத்தை, 1800 4250 111 மற்றும், 94983 45350 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
