/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சல் போட்டிகளில் சளைக்காத சாதனை: மாற்றுத்திறனாளி மாணவர் அசத்துகிறார்
/
நீச்சல் போட்டிகளில் சளைக்காத சாதனை: மாற்றுத்திறனாளி மாணவர் அசத்துகிறார்
நீச்சல் போட்டிகளில் சளைக்காத சாதனை: மாற்றுத்திறனாளி மாணவர் அசத்துகிறார்
நீச்சல் போட்டிகளில் சளைக்காத சாதனை: மாற்றுத்திறனாளி மாணவர் அசத்துகிறார்
ADDED : அக் 27, 2025 11:15 PM

திருப்பூர்: அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சபரிஆனந்த், 14. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. அவிநாசிலிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த இரு ஆண்டாக நீச்சல் பயிற்சி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து, பதக்க வேட்டையாடி வருகிறார். கடந்த, 25ம் தேதி, தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் சார்பில், சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சபரி ஆனந்த் பங்கெடுத்தார்.
இதில், 50 மீ., பிரிவில், ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக் என,3 பிரிவுகளிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இதன் வாயிலாக, அடுத்த மாதம், 13ம் தேதி ஐதராபாத்தில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுக்கும் தகுதி பெற்றிருக்கிறார்.
அவரது தந்தை ராஜா கூறியதாவது:
என் மகன் கடந்தாண்டு, கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுத்து, தங்கம் வென்றார். அவருக்கு, சிறுபூலுவப்பட்டியில் உள்ள நீச்சல் அகாடமி பயிற்சியாளர்கள் சிபு, சுதீஷ் ஆகியோர் பயிற்சி வழங்கி, உதவி வருகின்றனர்; சபரியும், ஆர்வத்துடன் கற்று வருகிறார். வெளியூர்களில் நடக்கும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடம் உட்பட அனைத்து செலவினங்களையும் நாங்களே ஏற்க வேண்டியுள்ளது; வெளியில் நன்கொடை திரட்ட வேண்டியிருக்கிறது; சிலர் மனமுவந்து உதவுகின்றனர்.
வரும், 13ம் தேதி ைஹதராபாத்தில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் செலவுகளை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. கடந்தாண்டு கோவாவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு, ரொக்கப்பரிசு கிடைக்கும் என்றனர்; காத்திருக்கிறோம். இதுபோன்ற ரொக்கப்பரிசு மற்றும் அரசின் சார்பில் ஊக்கத்தொகை கிடைத்தால், போட்டிகளில் பங்கெடுக்க செல்வது எளிதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

