'கலப்பு குடியிருப்பு' என்பதால் அனுமதி மறுப்பு பிரின்டிங் யூனிட் இயங்குவதில் சிக்கல்
'கலப்பு குடியிருப்பு' என்பதால் அனுமதி மறுப்பு பிரின்டிங் யூனிட் இயங்குவதில் சிக்கல்
ADDED : செப் 19, 2026 03:06 AM

திருப்பூர்: திருப்பூரில், மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி, சுத்திகரிப்பு கட்டமைப்பு இல்லாத பிரின்டிங் நிறுவனங்களை மூடி வருகின்றனர்.
வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு அமைத்து, அனுமதி கோரி கடிதம் அளித்தால், மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களாக அனுமதி வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பிரின்டிங் யூனிட் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரின்டிங் தொழில் செய்து வருகிறோம். வீடுகள் இல்லாத பகுதிகளில் யூனிட்டுகளை அமைத்திருந்தோம். பின்னர் அந்த பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகின. தற்போது இயக்கத்துக்கு தயாராக உள்ள பிரின்டிங் யூனிட்டுகள், கலப்பு குடியிருப்பு பகுதியில் இருப்பதாக கூறி அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி வழங்காவிட்டால் குடும்பத்துடன் அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உயிர் கொடுங்கள்! திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
பெரும்பாலான பிரின்டிங் ஆலைகள் சுத்திகரிப்பு வசதியை அமைத்துள்ளன. சிறிய யூனிட்கள் சுத்திகரிப்பு வசதி இல்லாததால் மூடப்பட்டன.
அதன்பின், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை அமைத்து, மீண்டும் இயக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. கலப்பு குடியிருப்பு பகுதி என்ற காரணத்தால் அனுமதி வழங்குவதில் காலதாமதம் நீடிக்கிறது. ஏற்கனவே பல ஆண்டுகளாக இயங்கி வந்த யூனிட்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வி ரைவில் தீர்வு கிடைக்கும் இப்பிரச்னை குறித்து, மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் பாரதி கூறியதாவது:
கடந்த மூன்று மாதமாக, கலப்பு குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் பிரின்டிங் ஆலைகளுக்கு புதுப்பிப்பு உரிமம் வழங்குவது மேற்கு மண்டலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முறையாக சுத்திகரிப்பு கட்டமைப்பு அமைத்துள்ள, ஏற்கனவே கலப்பு குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வந்த யூனிட்டுகளுக்கு புதுப்பிப்பு உரிமம் வழங்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் உரிய வழிகாட்டுதலை வழங்கியதும், மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
