/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தூத்துக்குடியில் சேதமான பின்னலாடைகளுக்கு பேரிடர் நிவாரணம்! திருப்பூர் தொழில் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பு
/
தூத்துக்குடியில் சேதமான பின்னலாடைகளுக்கு பேரிடர் நிவாரணம்! திருப்பூர் தொழில் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பு
தூத்துக்குடியில் சேதமான பின்னலாடைகளுக்கு பேரிடர் நிவாரணம்! திருப்பூர் தொழில் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பு
தூத்துக்குடியில் சேதமான பின்னலாடைகளுக்கு பேரிடர் நிவாரணம்! திருப்பூர் தொழில் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 04, 2024 12:07 AM
திருப்பூர் : துாத்துக்குடி துறைமுக சரக்கு முனையத்தில் முழுவதும் சேதமான பின்னலாடைகளுக்கு, மத்திய அரசு பேரிடர் நிவாரணம் வழங்கி உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, கப்பல் மூலமாக, ஏற்றுமதி செய்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக, பழைய கிடங்குகளில் வைத்திருந்த பனியன் ஆடைகள் மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மழை வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்கான முயற்சி ஒருபுறம் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை சமாதானம் செய்து, புதிதாக பின்னலாடை உற்பத்தி செய்து அனுப்ப வேண்டிய நிர்பந்தம், தொழில் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
சரக்கு அனுப்பியிருந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், சரக்கு முனையத்தில் உள்ள பார்சல்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். சேதமான பின்னலாடைகளுக்கு இழப்பீடு கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், வர்த்தகருக்கு விரைவில் சரக்கு அனுப்பி, வழக்கமான வர்த்தக ஆர்டர்களை தக்கவைக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராத வெள்ள சேத பாதிப்பு காரணமாக, திருப்பூர் பின்னலாடைத்துறையின் சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள், 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளது. எனவே, இயற்கை பேரிடர் நிவாரணம் வழங்கி, தமிழக அரசும் முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
---
படம் வைக்கவும்
இழப்பீடு பெற முயற்சி
துாத்துக்குடி சரக்கு முனையத்தில், அதிக அளவு சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தால், பின்னலாடைகள் முழுமையாக சேதமடைந்துள்ளது; சேதத்தை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில், ஏற்றுமதியாளர், காப்பீடு திட்டங்களில் இழப்பீடு பெறுவற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். சுங்கத்துறை உட்பட, மத்திய அரசிடம் தேவையான உதவி கோரப்படும். இது குறித்து, தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
- சுப்பிரமணியன்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
சங்க தலைவர்
---
படம் வைக்கவும்
நிவாரண உதவி தேவை
துறைமுக சரக்கு முனையத்தில், சேதமான சரக்குகளுக்கு இழப்பீடு பெறுவது மிகவும் சிரமம் என்கின்றனர். சரக்கு போக்குவரத்து நேர பாதிப்புக்கு இழப்பீடு பெறலாம்; கிடங்கில் ஏற்பட்ட பாதிப்புக்கு எப்படி இழப்பீடு பெறலாம் என, சட்ட வல்லுனர்களிடம் கேட்டு வருகிறோம். சில கிடங்குகளில் இருந்த சரக்கு முழுமையாக சேதமானதால், புதிதாக ஆடைகளை தயாரித்து அனுப்ப வேண்டும் என்பதால் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசு, வெள்ள பாதிப்பால் சேதமான பின்னலாடைகளுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
- முத்துரத்தினம்
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும்
உற்பத்தியாளர் சங்க தலைவர்
20 நாள் தாமதம் ஏன்?
திருப்பூரில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னலாடை சரக்கு அனுப்புகையில், கப்பல் போக்குவரத்தின் போது, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. அதற்காக, வழக்கமான கப்பல் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்கு சென்றடைய, 20 நாட்கள் வரை கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது.
துறைமுகத்தில், சரக்குகள் தேக்கமடைய இதுவும் முக்கிய காரணம். எனவே, மத்திய அரசு தலையிட்டு, கப்பல் போக்குவரத்தில் உள்ள இடையூறுகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஒட்டு மொத்த பனியன் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.