/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளை ஈ பரவலுக்கு நோய்க்கட்டுப்பாடு! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
/
வெள்ளை ஈ பரவலுக்கு நோய்க்கட்டுப்பாடு! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
வெள்ளை ஈ பரவலுக்கு நோய்க்கட்டுப்பாடு! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
வெள்ளை ஈ பரவலுக்கு நோய்க்கட்டுப்பாடு! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
ADDED : செப் 23, 2025 08:23 PM
உடுமலை,; 'பல்வேறு காரணங்களால், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருவதால், ஒருங்கிணைந்த நோய்க்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்,' என உடுமலை வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. சில ஆண்டுகளாக இச்சாகுபடியில் பல்வேறு நோய்த்தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
தற்போது பரவலாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து வருவதால், ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் பின்பற்ற, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கலாமணி கூறியிருப்பதாவது: வெள்ளை ஈ தாக்கிய தென்னை மரங்களில் உள்ள இலைகளின் உட்பகுதியில், சுருள், சுருளாக வெள்ளை நிறத்தில் நீள்வட்ட வடிவில் பூச்சி கூட்டம் தென்படும்.
முட்டைகளின் மீது மெழுகு போன்ற வெள்ளை நிறத்துகள்கள் மூடியிருக்கும். இளம்பருவம் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள், ஒலைகளின் உட்புறத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி தென்னையின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.
இவ்வகை வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும், தேன் போன்ற இனிப்பான கழிவுத் திரவம் கீழ்மட்ட அடுக்கிலுள்ள தென்னங்கீற்றுகளின் மேல்பகுதியில் படிகின்றது.
இந்த தேன் போன்ற திரவத்தின் மீது கரும்பூசணம் வளர்வதால், தென்னை ஓலைகள் தற்காலிகமாக கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை தடைபட்டு தென்னை மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும்.
தேன் திரவத்தினை சேகரிக்க எறும்புகள் நடமாடும். இப்பூச்சியின் பெருக்கமும் தாக்குதலும் கோடை காலத்தில் தீவிரமாக இருக்கும்.
மாற்று உணவுப் பயிர்கள் சுருள் வெள்ளை ஈக்கள் சுமார், 250 வகையான இதர தாவரங்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றன.
இதில், தென்னையோடு மாற்று உணவுப் பயிர்களான கொய்யா, கோகோ, எலுமிச்சை, சப்போட்டா, வாழை, வெண்டை, செம்பருத்தி, ஜாதிக்காய், சீதாப்பழம், பலா, காட்டாமணக்கு, பப்பாளி, மா, கறிபலா, சேம்பு, அலங்கார பனை, அரளி, மரவள்ளி, பார்த்தீனியம் மற்றும் அலங்கார செடிகள் முக்கியமானதாகும்.
முட்டை பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறுவதற்கு, சுமார் 25-30 நாட்களாகும். வளர்ச்சியடைந்த ஈக்கள் கூட்டம் கூட்டமாக ஒலைகளின் அடிப்பகுதியில் காணப்படும்.
ஆண் வெள்ளை ஈக்களின் பின்புற நுனிப்பகுதியில் இடுக்கி போன்ற அமைப்பினைக் காணலாம்.
இந்த சுருள் வெள்ளை ஈக்கள், பருத்தியை தாக்கக்கூடிய வெள்ளை ஈக்களை காட்டிலும் 3 மடங்கு பெரிதானவை.
மேலாண்மை முறைகள் வெள்ளை ஈக்களை அழிக்க தென்னங்கீற்றுகளின் அடிப்பகுதியில், நன்கு நனையுமாறு விசைத் தெளிப்பானை கொண்டு மிகவேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் வாயிலாக, ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம்.
மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 5 அடி; அகலம் 1.5 அடி) ஏக்கருக்கு 20 வீதம், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு அல்லது தென்னை மரங்களின் தண்டுப்பகுதியில் சுற்றினால், அவை ஈக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கவர்ந்து அழிக்கவும் உதவும். விளக்கெண்ணைய் தேவைப்படும்போது மஞ்சள் நிற ஓட்டுப் பொறியில் தடவவும்.
இந்த ஒட்டும் பொறியுடன் சேர்த்து 'டியூப்லைட்' பொருத்துவதால், சிறந்த பலன் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒட்டுண்ணிக் குளவி, 'என்கார்சியா' கூட்டுப்புழு பருவத்தை உள்ளடக்கிய தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் 10 மரத்திற்கு ஒரு இலைத்துண்டு என்ற எண்ணிக்கையில், தாக்கப்பட்ட கீற்றுகளில் இணைக்கவும்.
'என்கார்சியா' ஓட்டுண்ணிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்க, தென்னை மரங்களுக்கு இடையில் கல்வாழை, வாழை மற்றும் சீதா செடிகளை ஏக்கருக்கு, 20 முதல் 25 என்ற எண்ணிக்கையில் ஊடுபயிராக நடவு செய்யவும்.
'கிரைசோபிட்' அல்லது 'அபெர்டோக்கிரைசா' என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் தாக்கப்பட்ட கீற்றுகளில் இணைக்கவும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்பெண்ணெய் 5 மி.லி., மற்றும் ஒட்டும் திரவம் ஒரு மி.லி., என்ற அளவில் கலந்து மரங்களின் அடிக் கீற்றுகளில் நன்கு நனையும்படி தெளிக்கவும்.
கரும்பூசணத்தை நீக்க, 25 கிராம் மைதாமாவு பசையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். இயற்கை எதிரிகளைப் பாதுகாக்க, பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.