/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் தாக்குதலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் வேதனை
/
நோய் தாக்குதலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் வேதனை
நோய் தாக்குதலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் வேதனை
நோய் தாக்குதலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் வேதனை
ADDED : டிச 19, 2024 11:47 PM

உடுமலை; சீதோஷ்ண நிலை மாற்றம், ஈ தாக்குதல், இலைச்சுருட்டு புழு தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், பட்டுப்புழு உற்பத்தி பாதித்துள்ள நிலையில், விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், பட்டுக்கூடு உற்பத்தியில், உடுமலை பகுதி பிரதானமாக உள்ளது. குறிப்பாக, உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது.
இதன் உற்பத்தியை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இப்பகுதிகளில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
முட்டை வித்தகங்களிலிருந்து பெறப்படும் முட்டை தொகுதிகள், இளம் புழு வளர்ப்பு மனைகளில், முட்டை பொரித்து, 7 நாட்கள் பராமரித்து, பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும். தற்போது, மழை மற்றும் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், ஈ தாக்குதல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதே போல், பட்டுப்புழுக்களுக்கு உணவாக வழங்கப்படும், மல்பெரி இலையில், இலைச்சுருட்டு புழுக்களும் தாக்கி வருவதால், மகசூல் பாதியாக குறைந்துள்ளது. இதனால், பட்டுக்கூடு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், பெரிய அளவிலான ஈக்களின் தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. ஈ வந்து, புழுக்களின் மேல் அமரும் போது அவை இறந்து விடுகிறது.
ஒரு ஈ உள்ளே நுழைந்தாலும், பல்கி பெருகி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், புழு வளர்ப்பு மனைகளில் உள்ள, புழுக்களில், 50 சதவீதம் வரை இறந்து வருகின்றன.
அதே போல், மல்பெரி செடிகளில், இலைச்சுருட்டு புழு தாக்குதல் காரணமாக, புழுக்களுக்கு உணவு வழங்க முடியாமலும், புழுக்கள் இறந்து வருகின்றன.
இதனால், வழக்கமாக, 100 முட்டை தொகுதிக்கு. 90 கிலோ, கூடு உற்பத்தி இருக்கும் நிலையில், தற்போது, 40 கிலோ வரை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. பட்டுக்கூடுகளுக்கான விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த மாதம், ஒரு கிலோ, ரூ.750 வரை விற்று வந்த நிலையில், தற்போது, ரூ.550 முதல், 600 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பட்டு வளர்ப்பு மனைகளில் ஆய்வு செய்து, ஈ மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த உரிய தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இதுகுறித்து, தமிழக அரசும், பட்டு வளர்ச்சித்துறையும் உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அரசின் நடவடிக்கையால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர்.