/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவு: நிரந்தர தீர்வுக்கு வழி காட்டுமா?
/
அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவு: நிரந்தர தீர்வுக்கு வழி காட்டுமா?
அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவு: நிரந்தர தீர்வுக்கு வழி காட்டுமா?
அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவு: நிரந்தர தீர்வுக்கு வழி காட்டுமா?
ADDED : ஜன 28, 2025 11:58 PM
திருப்பூர்; மண் வளத்தை நாசமாக்கி, சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு முழுதும், மாதத்தின் கடைசி சனிக்கிழமை, நெகிழி சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடந்த சனிக்கிழமையன்று, நீர்நிலை பகுதிகளில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் பணி நடந்தது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியத்தினர் இணைந்து இப்பணி மேற்கொண்டனர்.
திருப்பூரில் நொய்யலாற்றங்கரை பகுதிகளான காசிபாளையம், ஆண்டி பாளையம், ராயபுரம், சிறுபூலுவப்பட்டி பகுதி; நல்லாற்றங்கரை பகுதிகளான அங்கேரிபாளையம், நஞ்சராயன்குளம் மற்றும் உப்பாறு அணை, அமராவதி, திருமூர்த்தி அணைகள், சாமளாபுரம் ஏரி சுற்றுப்பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அடுத்த மாதம் கடைசி சனிக்கிழமை, கோவில் வளாகங்களில் பிளாஸ்டிக் அகற்றும் பணி நடக்கிறது.
இதில், மாசு கட்டுப்பாடு வாரியத்தினருடன் அந்தந்த பகுதியில் உள்ளாட்சி நிர்வாக பணியாளர்கள், பொது சுத்திகரிப்பு நிலைய பணியாளர்கள் இணைந்தனர். நஞ்சராயன் குளம் பகுதியில் நடந்த பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் வனத்துறை மற்றும் திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்கள் பங்கேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.
மூட்டை, மூட்டையாக சேகரிக்கப்பட்ட குப்பைகள், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவை எந்த அடிப்படையில் அகற்றப்படுகிறது என்பது கேள்விக்குறி. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடு என்பது, திருப்பூரை பொருத்தவரை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், நெகிழி சேகரிப்பு பணி என்பது, எந்தளவு பயன் தரும் என்பதும் கேள்விக்குறி தான்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
திருப்பூரில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதினுக்கு சரியான மாற்று கிடைக்காதவரை, அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவோ, முற்றிலுமாக ஒழிக்கவோ முடியாது. எனவே, மறுசுழற்சி என்பது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.
எனவே, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் அருகேயுள்ள ஊராட்சிகளை இணைத்து, ஆங்காங்கே சேகரிக்கப்படும் பாலதின் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை பொறுத்துவது, அல்லது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரியான கட்டமைப்புடன் மேற்கொண்டால் மட்டுமே, நெகிழி ஒழிப்புத்திட்டம் பலன் தரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.