/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., நீர்பங்கீட்டில் குளறுபடி; தீர்வு காண இன்று ஆலோசனை
/
பி.ஏ.பி., நீர்பங்கீட்டில் குளறுபடி; தீர்வு காண இன்று ஆலோசனை
பி.ஏ.பி., நீர்பங்கீட்டில் குளறுபடி; தீர்வு காண இன்று ஆலோசனை
பி.ஏ.பி., நீர்பங்கீட்டில் குளறுபடி; தீர்வு காண இன்று ஆலோசனை
ADDED : ஆக 24, 2025 11:37 PM
உடுமலை; பி.ஏ.பி., பாசனத்தில் நீர் திருட்டு, நீர்ப்பங்கீடு குளறுபடிகளுக்கு தீர்வு காண, அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு தற்போது நீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கால்வாய் கரையோரத்தில், கிணறுகள் அமைத்தும், நேரடியாகவும் நீர் திருடப்பட்டு வருகிறது. பகிர்மான கால்வாய்களில், பாசன நிலப்பரப்புக்கு ஏற்ப நீர் வழங்கப்படுவதில்லை.
கடைமடைக்கு நீர்ப்பற்றாக்குறை, ஒரு சிலர் அதிகளவு நீர் எடுத்துக்கொள்வது என, நீர் வினியோகத்தில் குளறுபடி உள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டரிடமும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, பி.ஏ.பி., பாசன திட்ட குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், தனியாக கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், பி.ஏ.பி., திருமூர்த்தி கோட்ட பகுதிகளுக்குட்பட்ட பாசன சங்கங்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் வகையில், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் குமார் தலைமையில்,இன்று (25ம் தேதி), மாலை, 5:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது.
இதில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள திருமூர்த்தி அணை, உடுமலை, பூலாங்கிணர், புதுப்பாளையம் கிளைக்கால்வாய்களுக்குட்பட்ட அதிகாரிகள், பாசன சங்க நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.