டெங்கு தடுப்பு நடவடிக்கை அவசியம் ‘உஷார்’படுத்தும் மாவட்ட நிர்வாகம்
டெங்கு தடுப்பு நடவடிக்கை அவசியம் ‘உஷார்’படுத்தும் மாவட்ட நிர்வாகம்
ADDED : செப் 24, 2026 07:50 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல் பரவலாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
பள்ளி, கல்லுாரிகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஆசிரியர்களுக்கு டெங்கு பரவலை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
தென்மேற்கு பருவமழை மற்றும் பருவகால மாற்றம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு, சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி, முதிர்ந்த கொசுவாகிறது.
டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டி, பூந்தொட்டிகள், மணிபிளான்ட், தேங்காய் சிரட்டையில் தேங்கும் நீரினால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. டெங்கு பரவலை தடுக்க மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாக கழுவி, நீர் பிடித்த பின் காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
