/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட குறைதீர் கூட்டம் ரத்து: விவசாயிகள் அதிருப்தி
/
மாவட்ட குறைதீர் கூட்டம் ரத்து: விவசாயிகள் அதிருப்தி
மாவட்ட குறைதீர் கூட்டம் ரத்து: விவசாயிகள் அதிருப்தி
மாவட்ட குறைதீர் கூட்டம் ரத்து: விவசாயிகள் அதிருப்தி
ADDED : செப் 01, 2025 07:22 PM
-- நமது நிருபர் -
எவ்வித காரணமும் இன்றி, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை, மாவட்ட நிர்வாகம் உதறி தள்ளிவிட்டது. தீர்க்கப்படாத பிரச்னைகள் குவிந்துள்ள நிலையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாதது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அரசு அலுவலர்கள், குறைகேட்பு கூட்டத்திலேயே பதிலளிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு குறைகேட்பு கூட்டத்திலும், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு அளிக்கின்றனர்.
தேர்தல் காலம் தவிர, வேறு எந்த சூழலிலும், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால், இதுவரை இல்லாத வகையில், நடைபெறவேண்டிய இந்த மாத கூட்டத்தை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரம் நடத்த வாய்ப்பு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமியிடம் கேட்டபோது, 'இம்மாத விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாததற்கு எந்த காரணமும் இல்லை. கலெக்டரின் டூர் புரோகிராமிலேயே, குறைகேட்பு கூட்டம் இடம் பெறவில்லை. அதனாலேயே நடத்தப்படவில்லை. கலெக்டர் நேரம் சொன்னால், அடுத்த வாரத்தில் ஒருநாள் நடத்தப்படும்,' என்றார்.
பிரச்னைகள் எதிர்கொள்ளாமல் தவிர்ப்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கொள்கைப் பரப்பு செயலாளர் பரமசிவம்:
விவசாய நிலங்கள் வழியாக ஐ.டி.பி.எல்., காஸ் குழாய் பதிக்க எதிர்ப்பு, இனாம் நிலம் விவகாரம், விவசாய நிலங்கள் வழியாக உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு, அனுப்பட்டியில் உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 900 நாட்களாக விவசாயிகள் போராட்டம், உழவர் சந்தை பிரச்னை, பி.ஏ.பி.,-ல் இரண்டாம் சுற்று தண்ணீர் வந்து சேரவில்லை இப்படி, எக்கச்சக்கமான விவசாய பிரச்னைகள் மாவட்டத்தில் உள்ளன.
கடந்த மாத கூட்டத்தில், கலெக்டர் முன்னிலையிலேயே, பி.ஏ.பி., பகிர்மான குழுவினரும், உப்பாறு அணை விவசாயிகளும் நேருக்குநேர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனாம் நிலம் பிரச்னைகளை சொல்ல, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.
இதனால், குறைகேட்பு கூட்டமே ஸ்தம்பித்தது, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வும் காண்பதில்லை; சரியான பதிலும் இல்லாத நிலையில், கடந்த மாதம் போலவே, இம்மாதமும் வாக்குவாதம் ஏற்படும் என்பதால், குறைகேட்பு கூட்டம் நடத்தாமல் கமுக்கமாகி விட்டனர்.
மெத்தனப்போக்கு பொறுப்பின்மை பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி:
பி.ஏ.பி., வாய்க்காலில் கடைமடைக்கு உரிய தண்ணீர் வந்து சேரவில்லை. இதுதொடர்பாக குறைகேட்பு கூட்டத்தில் பேச வேண்டாம்; தனியே கூட்டம் நடத்தி பேசலாம் என கடந்த இரு மாதங்களாக கலெக்டர் சொல்கிறார். ஆனால், இன்னும், சிறப்பு கூட்டம் நடத்தப்படவில்லை.
பி.ஏ.பி., நீர் பகிர்மான பிரச்னை, நாய் கடித்து பலியான ஆடுகளுக்கு இழப்பீடு கிடைக்காதது என, ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், இம்மாத குறைகேட்பு கூட்டத்தை ரத்து செய்திருப்பது அதிகாரிகளின் மெத்தன போக்கையே காட்டுகிறது.
அதிகாரிகளிடம் கேட்டால், 'கலெக்டரின் ெஷட்யூலில் இல்லை,' என, பொறுப்பற்ற முறையில் பதில் சொல்கின்றனர். குறைகேட்பு கூட்டம் நடத்துவதையே, குறை சொல்லவேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானதே.