கால்நடை வளர்ப்பு மேம்பாடு மாவட்ட அளவில் குழு அமைப்பு
கால்நடை வளர்ப்பு மேம்பாடு மாவட்ட அளவில் குழு அமைப்பு
ADDED : ஜன 24, 2026 04:31 AM
திருப்பூர்: தமிழகத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக, விவசாய அமைப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குனர் சார்பில், அனைத்து மாவட்ட மண்டல இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கால் நடைத்துறை சார்பில், பல்வேறு மாவட்டங்களில் கால்நடை பண்ணைகள் செயல்படுகின்றன. ஆடு, செம்மறியாடு, வெண்பன்றி, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை, அரசு செயல்படுத்தியும் வருகிறது.
கால்நடை வளர்ப்பை மேம்படுத்த, அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்த, கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநில அளவில் செயல்பாடு குழுமம் அமைக்கப்பட்டது. அதே போன்று, மாவட்ட மற்றும் வட்டார அளவில், 'கால்நடை வளங்கள் குழு' அமைத்து, அதன் செயல்பாடுகள் தொடர்பான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் விவரங்களை, மாநில அளவிலான செயல்பாட்டு குழுமத்தினர் ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்குவர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
