/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி சந்தோஷம் தீரல... ஊழியர்கள் வேலைக்கு வரல!
/
தீபாவளி சந்தோஷம் தீரல... ஊழியர்கள் வேலைக்கு வரல!
ADDED : நவ 05, 2024 06:20 AM

திருப்பூர்; தீபாவளி பண்டிகையை ஒட்டிய விடுமுறை முடிந்தும், கட்டுமானப் பணியாளர்கள் முழுமையாக பணிக் குத் திரும்பவில்லை. இதனால், மாநகராட்சி பகுதியில் பணிகளில் சுணக்கம் நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நிறுவனங்கள் டெண்டர் எடுத்து நேரடியாகவும், சில பணிகளில் சப்-கான்ட்ராக்ட் அடிப்படையிலும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அக்., 31 மற்றும் நவ.,1 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகவும், அடுத்த இரு நாட்கள் வார விடுமுறையாகவும் இருந்தது. இதனால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியன விடுமுறை விடப்பட்டிருந்தது.
அவ்வகையில், மாநக ராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் பெருமளவு பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றனர். சொந்த ஊர் செல்லாத சிலரும் பண்டிகையை முன்னிட்டு பணிகளில் ஈடுபடவில்லை.
இந்நிலையில், பண்டிகை விடுமுறைக்குப் பின் நேற்று வழக்கமான இயல்பு நிலை மெல்லத் திரும்பியது. திருப்பூரைப் பொறுத்தவரை ஓரளவு நேற்று தொழிலாளர்கள் வருகை மற்றும் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு ஓரளவு வழக்கமான பரபரப்பு காணப்பட்டது.
இருப்பினும், வளர்ச்சிப் பணிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வருகை முழுமையாக இல்லை. இதனால், பண்டிகையின் போது நிறுத்தப்பட்ட இப்பணிகள் நேற்று முழுமையாக மீண்டும் துவங்கவில்லை.
குறைந்த அளவிலான தொழிலாளர்கள் இருந்த நிலையில், தேவையான அளவு தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதால், நேற்று முழு வீச்சில் பணிகள் நடக்கவில்லை. இரண்டொரு நாளில் அனைவரும் பணிக்குத் திரும்பிய பின் பணிகள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.