நீண்ட கால பிரச்னைகளுக்கு 6 மாத காலத்திற்குள் தீர்வு: தி.மு.க. வேட்பாளர் இந்திராணி உத்தரவாதம்
நீண்ட கால பிரச்னைகளுக்கு 6 மாத காலத்திற்குள் தீர்வு: தி.மு.க. வேட்பாளர் இந்திராணி உத்தரவாதம்
ADDED : ஏப் 22, 2026 08:03 PM
திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் மருத்துவம் மற்றும் சுகாதாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தி, இதற்கான கட்டமைப்பே மேம்படுத்த பாடுபடுவேன் என்று, தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார். களப்பணியை முடித்து அவர் நம்மிடம் கூறியதாவது:
எளிய குடும்பத்தில் பிறந்து, படிப்படியாக வளர்ந்து டாக்டராகி மக்கள் சேவையாற்றியுள்ளேன். பரம்பரையாக தி.மு.க.வில் இருந்து பல்வேறு மக்கள் பணிகளை செய்துள்ளது. இப்படி பல்வேறு பெருமைக்குரிய குடும்பத்தில் இருந்து வந்து, கடந்த, ஐந்து ஆண்டுகளாக தி.மு.க. வில் கட்சி பணி செய்து, மருத்துவ பிரிவில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் குரலாக ஒலித்தேன். எனக்கான பரிசாக, முதல்வர் ஸ்டாலின், இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார்.
கடந்த, இரு வாரங்களாக ஒவ்வொரு கிராமம் வாரியாக மக்களை சந்தித்து, ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள நலத்திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், எந்த மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மக்களை சந்தித்த போது, நீண்ட கால பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். அவற்றுக்கு, பொறுப்பேற்று, ஆறு மாத காலத்துக்குள் தீர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த தொகுதிக்கு என்னை அர்ப்பணித்து மக்கள் பணியாற்ற உள்ளேன். தொகுதி மீது அக்கறை கொண்டு, தாராபுரத்துக்கு வேண்டிய திட்டங்கள் கொண்டு வர முனைப்புடன் செயல்படுவேன். மருத்துவம், சுகாதாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும். மருத்துவ சேவையாற்றிய எனக்கு, மக்கள் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ள மகிழ்ச்சியான ஒன்று.
இவ்வாறு, அவர் கூறினார்.
