ADDED : ஏப் 09, 2026 09:38 PM
திருப்பூர்:பல்லடம் மற்றும் தாராபுரத்தில் தி.மு.க. வேட்பாளர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்விகளை எழுப்பினர்.
பல்லடம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ், கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையம் கிராமத்தில் ஓட்டு சேகரிக்கச் சென்றார். கிராம மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டா கேட்டுப் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஓட்டு கேட்க வரும் நீங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? மதுக்கடைகள் மூடப்படும் என தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்னவானது? ஐந்தாண்டுக்கு முன் இங்கு வந்த எம்.பி. கனிமொழி வாக்குறுதி அளித்திருந்தார். மதுக்கடைகளை மூடிவிட்டீர்களா? எங்களை எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள்? என ஆவேசமாக முறையிட்டனர்.
அவர்களிடம் செல்வராஜ், உங்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன். வெற்றி பெற்றதும் உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் கொண்டு சென்று நிச்சயம் தீர்வு காண்பேன், என்றார். இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பு நீடித்ததால், பிரசாரத்தைக் கைவிட்டு வேட்பாளரும் கட்சியினரும் அங்கிருந்து புறப்பட்டனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாராபுரம் தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இந்திராணி, கட்சி நிர்வாகிகளுடன் குளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஓட்டு சேகரிக்க நேற்று முன்தினம் இரவு சென்றார். அவரை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் கருப்பு கொடி, பலுானை காட்டிய படி எதிர்ப்பை பதிவு செய்தனர். வேட்பாளரை சூழ்ந்த கிராம மக்கள் அவரிடம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
''ஊருக்குள் கொசு மருந்து அடிச்சு, அஞ்சு வருஷமாச்சு. ரோடு ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு. 'சிப்காட்' வருதுன்னு சொல்றாங்க. அப்படி வந்தாக்க, நிலத்தடி நீர் பாதிக்கும்னு சொன்னோம். இதுக்காக, பல போராட்டம் பண்ணியும் கூட ஒரு ஆள் கூட எட்டி பார்க்கலே. பஸ் ஸ்டாண்ட் ரொம்ப நாறுது. குப்பையை கூட்டி, ஆறு மாசமாச்சசு. ஆனா, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி ஆட்கள வச்சு, அவரோட தோட்டத்தில் வேலை செய்ய வக்கிறாரு. இப்போ, எத வச்சு ஓட்டு கேட்டு வர்றீங்க...' என, குற்றம்சாட்டி மக்கள் கேள்விகளை எழுப்பினர்.
பொதுமக்களை சமாதனப்படுத்திய வேட்பாளர், 'சிப்காட் வந்தால், நிலத்தடி நீர் மோசமாகும் என்று டாக்டரான எனக்கு தெரியும். அதை வராமல் தடுப்பேன். எனக்கு, ஒரு வாய்ப்பு கொடுங்கள். மூன்று மாதத்தில், அனைத்தும் மாறும்,' என்று கூறியபடியே அடுத்த கிராமத்துக்கு சென்றார்.
