ADDED : அக் 07, 2025 11:45 PM

திருப்பூர்; உள்ளூர் நபர்களையே, பால் கூட்டுறவு சங்க செயலாளர், பால் கொள்முதல் மற்றும் பால் பரிசோதகர் பணியிடங்களுக்கு நியமிக்க வேண்டும் என துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள், பால்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், தாங்கள் வழங்கும் பாலுடன், சங்க ஊழியர் சிலர், தண்ணீர் கலப்பதாகவும், போலி கணக்குகளை உருவாக்கி, ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடியாக பரிமாற்றம் செய்ததாகவும், பால் உற்பத்தியாளர்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், சங்க பால் பரிசோதகர் குப்புசாமியை 'சஸ்பெண்ட்' செய்தனர்.
இந்நிலையில், துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் நேற்று மாலை, கலெக்டர் அலுவலகத்திலுள்ள, 6வது தளத்திலுள்ள பால் வளத்துறை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர். அங்கு, பால் வளத்துறை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பொறுப்பு) பவணந்தியிடம், உள்ளூர் நபர்களையே சங்கத்துக்கு நியமிக்க கோரிக்கை விடுத்தனர்.
அதில், 'உடனடியாக புதிய செயலாளரை நியமிக்கவேண்டும். தகுதியான மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கும், உள்ளூரை சேர்ந்த நபர்களை, ஊழியராக நியமிக்கவேண்டும்' என வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில், அதிகாரிகள் மற்றும் பால் உற்பத்தியாளரிடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன.
பால் வளத்துறை கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், 'துலுக்கமுத்துார் பால் கூட்டுறவு சங்க முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பால் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; ஓய்வு பெற்ற செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருகிலுள்ள பால் கூட்டுறவு சங்க செயலாளர், கூடுதல் பொறுப்பாக, துலுக்கமுத்துாருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பால் பரிசோதகர் உட்பட பணியிடங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.
பால் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், 'துலுக்கமுத்துார் பால் கூட்டுறவு சங்க கொள்முதல் மையத்துக்கு, செயலாளர், பால் பரிசோதகர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிக்கு, சம்பந்தமே இல்லாத வேறு பகுதியிலுள்ளவர்களை நியமித்துள்ளனர். சங்கத்தின் உறுப்பினராக உள்ள நபரை, செயலாளராக நியமிக்க வேண்டும். பால் பரிசோதகர் உள்ளிட்ட பணிகளுக்கு, தகுதியானவர்களை நியமிக்கவேண்டும். இல்லாவிடில், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,' என்றனர்.