/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மைப்பணி குளறுபடி நீங்குமா? ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு வார அவகாசம்
/
துாய்மைப்பணி குளறுபடி நீங்குமா? ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு வார அவகாசம்
துாய்மைப்பணி குளறுபடி நீங்குமா? ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு வார அவகாசம்
துாய்மைப்பணி குளறுபடி நீங்குமா? ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு வார அவகாசம்
ADDED : பிப் 07, 2025 10:25 PM
திருப்பூர்; கவுன்சிலர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து திருப்பூரில், துாய்மைப்பணியில் ஒப்பந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்; இதற்கு ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
திருப்பூரில் நிலவும் குப்பை அகற்றும் பிரச்னை, தெரு விளக்கு பராமரிப்பு, ரோடுகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள், கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சரமாரியாக குற்றஞ்சாட்டினர். கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டிய பிரச்னைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைளை மேயர் மற்றும் கமிஷனர் மேற்கொண்டுள்ளனர்.மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:குப்பை அகற்றும் பிரச்னையில், முக்கியமாக ஆட்கள் பற்றாக்குறை, வாகனங்கள் குறைவு என புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சுகாதார பிரிவு அலுவலகங்களில் துாய்மைப் பணியாளர் வருகைப் பதிவு ஆய்வு செய்யப்பட்டது. நிரந்தர பணியாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கியும், அதற்கேற்ப ஒப்பந்த பணியாளர்களை அங்கு பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாத காரணத்தால் ஏற்கனவே, 35 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வாகனங்களுக்கு, 95 பேட்டரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகளவில் பெண் பணியாளர்கள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக ஆண்களை பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் முழுமையாக அனைத்து விதிமுறைகளின் படி இயங்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ரோடுகள் அனைத்தும் சீரமைப்பு செய்யப்பட்டு விட்டது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது மண்டலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தனியாக ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உதவி கமிஷனர் மருத்துவ விடுப்பில் உள்ளதால் கடந்த வாரம் திட்டமிட்ட கூட்டம் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.