/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீருக்காக காலில் விழ வேண்டுமா?
/
குடிநீருக்காக காலில் விழ வேண்டுமா?
ADDED : டிச 31, 2025 06:52 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி ஊராட்சி, அம்மன் நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கடந்த, 13 ஆண்டுகளாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இப்பகுதி பெண்கள், குடங்களுடன், பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
அம்மன் நகர் உருவாகி 13 ஆண்டாகியும் குடிநீர் கிடைக்கவில்லை. 10 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, குடிநீர் குழாய் அமைத்தனர். வாக்காளர் அட்டை முகவரியை மாற்றினால் தான் குடிநீர் வரும் என்று கூறியதால், அதையும் மாற்றினோம்.
ஊர் எல்லையில் உள்ள அழுக்கு பிடித்த, புழுக்கள் நெழியும் சின்டெக்ஸ் டேங்கில், வாரம் இரண்டு குடம் தண்ணீர் வருகிறது. அதுவும், கடல் நீரே தோற்றுவிடும் அளவு உப்பாக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வீட்டுக் கடனை கட்ட முடியும். குடிநீர் கேன் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது.
குடிநீருக்காக யார் காலிலாவது விழ வேண்டுமா என்று கூறுங்கள்; அதையும் செய்கிறோம். ஏற்கனவே, இப்பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதி களும் செய்வதில்லை. இங்கிருந்து செல்லலாம் என நினைத்தால், வீட்டை வாங்குவதற்கு கூட யாரும் தயாராக இல்லை.
எங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டும். இனியும் சமாதானம் செய்து எங்களை அனுப்பும் செயல் வேண்டாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பி.டி.ஓ., பானுப்பிரியா, பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

