/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களுக்கு கருத்தடை பணி தினமும் தொடர வேண்டும்
/
நாய்களுக்கு கருத்தடை பணி தினமும் தொடர வேண்டும்
ADDED : அக் 05, 2024 03:56 AM
''தெரு நாய்கள் மீது கருணை கொள்ள வேண்டும்; கருத்தடை வாயிலாக அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு கூட, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்குகின்றனர்'' என்கிறார் இந்திய விலங்கு நலவாரிய பிரதிநிதி முருகேஸ்வரி.
அவர் கூறியதாவது: தமிழ்நாடு விலங்கு நல வாரியம் சார்பில் சமீபத்தில், நகராட்சி கமிஷனர்கள் மட்டத்திலான கூட்டம் நடத்தப்பட்டது. இதில், உள்ளாட்சி நிர்வாகங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களை உரிய கட்டமைப்புடன் சரியாக பராமரிக்க வேண்டும்; நாய்களை பிடிப்பதற்கான பிரத்யேக பயிற்சி, திருச்சியில் வழங்கப்பட்டது.
வாரத்துக்கு, 20 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்ய முடியும் என்பதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் தினசரி குப்பை அள்ளும் பணியில் கவனம் செலுத்துவது போன்று, தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியையும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான கருத்தடை மையம், உரிய கட்டமைப்புடன் இல்லை. பல இடங்களில் குடோன்களாக பயன்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சி நிர்வாகங்கள் மனது வைத்தால் தான் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியும்.
மனிதர்களுக்கு வெறிநாய் கடித்த, 5 நாட்களுக்கு பின், 6 ஆண்டுகள் வரை எப்போது வேண்டுமானாலும் அதன் பாதிப்பு தொடங்கலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்படும். உணவு உட்கொள்ள முடியாது. தண்ணீரை கண்டாலே பயம் ஏற்படும். வலிப்பு ஏற்பட்டு, பின், உயிரிழப்பு நேரிடும். 'தமிழகத்தில் ரேபிஸ் பரவல் பெரிய அளவில் இல்லை' என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரேபிஸ் தாக்கப்பட்ட நாய், ஓரிடத்தில் இருக்காது; அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருக்கும். உணவு, நீர் உட்கொள்ளாது. ஒருவித பதட்டத்துடன் இருக்கும்; ரேபிஸ் தாக்கப்பட்டு அதிகபட்சம் நான்கு நாளில் இறந்துவிடும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், நாய்களை வளர்ப்போர் இதை செய்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.