/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணையவழி மோசடியாளர்களிடம் இனி ஏமாறவே கூடாது!
/
இணையவழி மோசடியாளர்களிடம் இனி ஏமாறவே கூடாது!
UPDATED : பிப் 18, 2024 04:37 AM
ADDED : பிப் 17, 2024 11:45 PM

இணையவழி பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், திருப்பூரைச் சேர்ந்த தொழில்துறையினர் துவங்கி தொழிலாளர், மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, போலி செயலிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. விழிப்புணர்வு இல்லையேல் ஏமாறுவது நிச்சயம்.
திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மக்களின் அறியாமை, பேராசை போன்றவற்றை பயன்படுத்தி கும்பல்கள் பணத்தை எளிமையாக மோசடி செய்கின்றனர். போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு செய்தாலும், படிக்காதவர்களை விட, படித்தவர்களே ஏமாறுவது வேதனையான ஒன்று. அரசு ஊழியர், டாக்டர், ஐ.டி., ஊழியர் என, பல உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் தங்கள் நீண்ட கால சேமிப்பை இழந்து வருகின்றனர். சில மோசடிகளில் வெளியே தெரிந்தால், அசிங்கமாக இருக்கும் என, புகார்கள் வருவதில்லை.
சமீப காலமாக, பங்குசந்தை முதலீடு, ஓட்டல் ரீவ்யூ, விளம்பர 'டாஸ்க்'குகளை முடிப்பது போன்ற பாணியில் பணத்தை பறிக்கின்றனர். இதுதவிர போலீஸ் உயரதிகாரிகள் பேசுவதாக கூறி ஏமாற்றுகின்றனர்.
![]() |
மிகுந்த சவால்
பங்குசந்தை முதலீடு, கடன் செயலி போன்றவை சீன நாட்டை சேர்ந்தவைகள். இவற்றை வெளிநாடுகளில் இருந்தபடி இயக்குகின்றனர். பணப்பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ள, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளை இயக்கி அதன் மூலம் பணத்தை எடுக்கின்றனர். நம்மிடம் இருந்து எடுக்கப்படும் பணம், உடனடியாக, 'கிரிப்டோ கரன்சி' உள்பட பலவிதங்களில் மாற்றி எடுத்து விடுகின்றனர். இந்த பணத்தை மீட்க மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பகிர்வதோ, யாருக்கும் தெரியப்படுத்துவதோ கூடாது. சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை அணுக வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இணைய வழி மோசடியாளர்களிடம் இனி ஏமாறவே கூடாது என்று மனதில் உறுதியெடுப்பதோடு, விழிப்புணர்வுடன் செயல்படுவதும் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.