/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மொபைல் போன் டவர்' என்.ஓ.சி.,யில்... 'அலட்சியம் கூடாது!' அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'அட்வைஸ்'
/
'மொபைல் போன் டவர்' என்.ஓ.சி.,யில்... 'அலட்சியம் கூடாது!' அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'அட்வைஸ்'
'மொபைல் போன் டவர்' என்.ஓ.சி.,யில்... 'அலட்சியம் கூடாது!' அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'அட்வைஸ்'
'மொபைல் போன் டவர்' என்.ஓ.சி.,யில்... 'அலட்சியம் கூடாது!' அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., 'அட்வைஸ்'
ADDED : ஜன 20, 2024 02:20 AM

திருப்பூர்;அதிகாரிகளின் அலட்சியத்தால், திருப்பூர் மாவட்டத்தில், 45 மொபைல் போன் டவர் அமைப்பதற்கு, தன்னிச்சையான தடையின்மைச்சான்று வழங்கப்பட்டு விட்டதாக ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.
நிலம் ஆக்கிரமிப்பு சார்ந்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிலுவை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மொபைல் போன் டவர் அமைக்க தடையின்மைச்சான்று வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 21 மொபைல் போன் டவர் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று கோரும் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
நடவடிக்கை பாயும்!
டி.ஆர்.ஓ., பேசியதாவது:
துறை சார்ந்த அதிகாரிகள், 'மொபைல் போன் டவர்' அமைவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து கள ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கையை, போர்ட்டலில் பதிவேற்றம் செய்யவேண்டும். 60 நாட்களுக்குமேல் அறிக்கை சமர்ப்பிக்கப்படாதபட்சத்தில், டவர் அமைப்பதற்கு தன்னிச்சையாகவே தடையின்மைச்சான்று அங்கீகரிக்கப்பட்டு விடுகிறது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்காததால், திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே, 45 இடத்தில், மொபைல் போன் டவர் அமைப்பதற்கு தன்னிச்சையாகவே தடையின்மை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யாமல், தன்னிச்சையாக தடையின்மை அனுமதி வழங்கப்பட்டு, எதிர்காலத்தில் மொபைல் போன் டவரால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி, நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். மொபைல் போன் டவர் அனுமதி சார்ந்த கோப்புக்களை, நீண்டநாள் நிலுவையில் வைத்திருக்க கூடாது.
இவ்வாறு, அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.