ADDED : ஜன 30, 2025 11:46 PM
திருப்பூர்: விளம்பரங்களை நம்பி, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உரங்களை வாங்க கூடாது என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் அறிக்கை:
உரக்கட்டுப்பாட்டு சட்டம் - 1985ன் படி, ரசாயன மற்றும் இயற்கை உரங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான வழிவகை இல்லை. எனவே விவசாயிகள், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உரங்கள் தரமானதா என உறுதிப்படுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாகவோ அல்லது தோட்டங்களில் நேரடியாக வந்து விற்பனை செய்ய முயற்சிக்கும் முகவர்களிடமிருந்து விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்தக்கூடாது.
இத்தகைய உரங்களை வாங்கி பயன்படுத்தினால், சாகுபடி செலவு அதிகரிப்பதுடன், மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள், வேளாண் துறையிடம் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிடமிருந்து மட்டுமே, இயற்கை, ரசாயன உரங்களை வாங்கவேண்டும். உர ஆய்வாளர்கள் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்கள், அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரம் விற்பனை செய்வதை உறுதிப்படுத்திவருகின்றனர்.
விவசாயிகளும், நகர்புறங்களில் மாடி தோட்டம் அமைத்துள்ள காய்கறி உற்பத்தியாளர்களும், ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம். வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது; அவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.