/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய் கடித்தபின் அலட்சியம் வேண்டாம்
/
நாய் கடித்தபின் அலட்சியம் வேண்டாம்
ADDED : ஜூன் 28, 2025 11:49 PM
திருப்பூரில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய் கடித்தால் தயக்கமின்றி, உடனடியாக, டாக்டர்களை சந்தித்து, சிகிச்சை பெற வேண்டும். நாய்க்கடிக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு. சிகிச்சை தாமதமாகும் போது, வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாய் வளர்ப்பவர்களும் தடுப்பூசி செலுத்தி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பத்மினி கூறியதாவது:
நாய் கடித்தால், உடனடியாக உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். தெருநாய்கள், வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்து பலர் காயமடையும் சம்பவங்கள் நடக்கிறது. பொதுவாக 'ரேபிஸ்' தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளஒரே வழி, தடுப்பூசி மட்டும் தான்.
நாய்களை பொறுத்த வரை, பிறந்த முதல் ஆண்டில் இருமுறை, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆண்டுதோறும் பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம்; முறையாக தடுப்பூசி செலுத்தாமல் விடுவது தவறு. இதனால், நம் வளர்ப்பு நாய் அல்லது தெருநாய் கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக்கி விடும்.
ரேபிஸ் தடுக்க மருந்துகள் இல்லை; நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். ரேபிஸ் கிருமி எல்லா நாய்களிடத்திலும் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. ரேபிஸ் கிருமி இருந்தால், அந்த நாய் கடிக்கும் போது, பிரச்னை வரும். மனிதனிடம் இருந்து மனிதனுக்கு ரேபிஸ் பரவாது. நாய்க்கடியில் நான்கு வகைகள் உள்ளது.
கீறல், ரத்தம் வர கடித்தல், சதை பிளந்து அதீத காயம் வருதல், உடல் உறுப்பு சேதமாகும் அளவு கடித்தல் என நான்கு வகையாக பிரிக்கலாம். எந்த வகை பாதிப்பாக இருந்தாலும், மருத்துவரை உடன டியாக சந்தித்து ஆலோசனை செய்து கொள்வது நன்மை தரும். நாய்க்கடிக்கு தடுப்பு நடவடிக்கையே முதன்மை மற்றும் முக்கியமானது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமும் 30 பேர் வரை
நாய்க்கடி படுகின்றனர்
திருப்பூரில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மட்டும் நாய் கடித்து, 20 - 30 பேர் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை, 50 - 60 ஆக உயர்கிறது. ஜனவரி முதல் மே வரை ஆறு மாதங்களில் 5,500 பேருக்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.