/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மை திக்குமுக்காட வேண்டாம்
/
திடக்கழிவு மேலாண்மை திக்குமுக்காட வேண்டாம்
ADDED : ஆக 29, 2025 10:38 PM

தி ருப்பூர், துப்புரவாளன் அறக்கட்டளை மற்றும் 'ட்ரீம் 20' பசுமை அமைப்பைச் சேர்ந்த, 9 பேர், கர்நாடக மாநிலம் உடுப்பி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.
துப்புரவாளன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறியதாவது:உடுப்பி நகராட்சி பகுதியில், தினசரி, 90 டன் குப்பை சேகர மாகிறது. வீடு, வீடாக செல்லும் நகராட்சி துாய்மைப்பணியாளர்கள், மக்கும் மற்றும் மக்காத குப்பையை தனித்தனியாக வாங்குகின்றனர். மக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகமே உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்.
மக்காத பாலிதீன் உள்ளிட்ட குப்பைகள், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள 'மெட்டீரியல் ரெகவரி சென்டர்' என்ற மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த மையத்தை, தனியார் நிறுவனத்தினர் பராமரிக்கின்றனர்.
மக்காத குப்பைகளை வகைப்படுத்தி, 'பண்டல்' செய்து, சிமென்ட் நிறுவனங்களுக்கும், மறு சுழற்சிக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
அந்த வகையில், வீடுகளிலேயே குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு, அகற்றப்படுவதால், தினசரி, 5 டன் மட்டுமே மக்காத குப்பை, இந்த மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கையாண்டது போக, எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில், வெறும், 10 டன் குப்பை தான் நிலத்தில் கொட்டி அப்புறப்படுத்தப்படுகிறது.
இருப்பினும், தனியார் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிக்கு, உடுப்பி நகராட்சி சார்பில், கிலோவுக்கு 5 முதல், 7 ரூபாய் கொடுத்தால் தான், பணியை தொடர முடியும் என, கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
வீடுகள்தோறும் குப்பைகள் தரம்பிரித்து வழங்க வேண்டும் இந்தப் பயண அனுபவம் அடிப்படையில், குப்பை பிரச்னையில் திக்குமுக்காடி வரும் திருப்பூர் மாநகராட்சியில், வீட்டுக்கு வீடு, ஆண்டின், 365 நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும்.
குப்பை சேகரிக்கும் பணியில், பேட்டரி வாகனத்தில், ஓட்டுனர் மற்றும் இரு பணியாளர் வீதம் அனுப்பினால் தான், அவர்களால் குப்பையை தரம் பிரித்து வாங்கி, அதே நிலையில் சேகரிக்க முடியும். பெறப்படும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகைப்படுத்தி, அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

