ADDED : பிப் 05, 2024 01:35 AM

பல்லடம்;கடந்த சில மாதங்களுக்கு முன், பல்லடம் நகராட்சி பகுதியில், குடிநீர் கசிவு ஏற்பட்டபோது, பல்வேறு இடங்களில் இருந்த பிரதான குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது, பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் முன்புறமும் குழி தோண்டப்பட்டது.
நான்கைந்து மாதங்கள் ஆன நிலையில், தோண்டப்பட்ட குழி இன்றுவரை மூடப்படவில்லை. பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, எண்ணற்ற புகார்தாரர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த குழி உள்ளது.
நீண்ட நாட்களாக குழி மூடப்படாததால், செடி - கொடிகள் முளைத்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதாலும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருப்பதாலும், விபத்து அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன், ஆபத்தான இந்த குழியை மூட நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
