/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் பல்கிப் பெருகிய 'டூபாக்கூர்' நிருபர்கள்; போலீஸ் - அரசு அதிகாரிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
/
திருப்பூரில் பல்கிப் பெருகிய 'டூபாக்கூர்' நிருபர்கள்; போலீஸ் - அரசு அதிகாரிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூரில் பல்கிப் பெருகிய 'டூபாக்கூர்' நிருபர்கள்; போலீஸ் - அரசு அதிகாரிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூரில் பல்கிப் பெருகிய 'டூபாக்கூர்' நிருபர்கள்; போலீஸ் - அரசு அதிகாரிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
ADDED : மே 22, 2025 03:50 AM

திருப்பூர் : செய்தித்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்தில் சமீப காலமாக டூபாக்கூர் நிருபர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், அனைத்து அரசு துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல இடங்களில் அன்றாடம், வாராந்திர, மாதாந்திர பத்திரிக்கை நிருபர்கள், 'யூ டியூப்', 'வாட்ஸ்-அப்'களில் செய்தி பிரிவு என்ற பெயரில் குழுக்களை உருவாக்கி வீடியோ மற்றும் தகவல்களை பதிவு செய்து டூபாக்கூர் நிருபர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
போலி நிருபர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஐ.டி., கார்டுகளை காட்டி, நிருபர்கள் என காட்டி, பணம் மிரட்டி பறிப்பது அதிகரித்து வருகிறது. செய்தித்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்தில் இவர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நிருபர்கள் என்ற போர்வையில் வலம் வரும் இவர்கள் சிறிய கடை, நிறுவனத்தில் ஆரம்பித்து பெரிய இடங்கள் வரை, கார்கள், பைக்குகளில் குழுக்களாக சென்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தராத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தவறான கருத்துக்களை குழுக்களில் பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுகின்றனர்.
குறிப்பாக, மணல் அள்ளும் கும்பல்களுடன் சேர்ந்து கொண்டு, அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவது அல்லது அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு, மணல் அள்ளும் கும்பலிடம் செய்தியை வெளியிடாமல் இருக்க என்று 'டீல்' பேசி, ஒரு தொகையை கறந்து விடுகின்றனர். குறிப்பாக, அந்தந்த டாஸ்மாக் கடை, பார்களில் வாரம், மாதம் வசூல் என, பட்டையை கிளப்பி வருகின்றனர்.
செய்தித்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குற்றப்பட்டியல்
* மூன்று நாள் முன், பல்லடம் அருகே சாய ஆலை நிறுவனம் ஒன்றில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய சென்ற, மூன்று பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் செய்தி வெளியிடாமல் இருக்க எட்டு பேர் கொண்ட டுபாக்கூர் குழு, தலா 50 ஆயிரம் வீதம், 4 லட்சம் ரூபாய் வரை லஞ்சாமாக வாங்கி செய்தி வெளிவராமல் பார்த்து கொண்டனர். இதனையறிந்த வி.சி.க., உள்ளிட்ட அமைப்புகள் உண்மை தகவலை மறைத்து, லஞ்சம் வாங்கிய போலி நிருபர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
* கடந்தாண்டு, அவிநாசி ரோடு, காந்தி நகர் அருகே பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து, மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் வாலிபரை கும்பல் வெட்டி கொன்றது. கொலையில் தொடர்புடைய, பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அதில், நிருபர்கள் என்ற பெயரில் வலம் வந்தது தெரிந்தது. அவர்களிடமிருந்து ஐ.டி., கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
* திருப்பூர் தெற்கு ஸ்டேஷன் பகுதியில் 'ஸ்பா'வில் பணம் கேட்டு மிரட்டி சென்ற இரு போலி நிருபர்கள், அங்கிருந்த பெண்ணை தாக்கி தகாத முறையில் பேசியது தொடர்பாக புகார் சென்றது. இதுதொடர்பாக போலீசார் மத்தியில் கட்டபஞ்சாயத்து செய்யப்பட்டு கைவிடப்பட்டது.
* பி.என்., ரோடு, பாண்டியன் நகரில் சட்டவிரோதமாக வீட்டில் தயார் செய்யப்பட்டு வந்த நாட்டு வெடிகள் வெடித்து சிலர் இறந்தனர். அதில், நாட்டு வெடி தயார் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் தன்னை நிருபர் என கூறி கொண்டு, அப்பகுதியில் மக்களை மிரட்டி வந்துள்ளார்.
இதுபோன்று அன்றாடம் போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்களில் மனு கொடுக்க வருபவர்களிடம், பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக அழைத்து சென்று பணம் பறித்து வருவது அதிகரித்துள்ளது.