/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு தேடி ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்; உறுதிப்படுத்த முகப்பதிவு முறை அமல்
/
வீடு தேடி ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்; உறுதிப்படுத்த முகப்பதிவு முறை அமல்
வீடு தேடி ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்; உறுதிப்படுத்த முகப்பதிவு முறை அமல்
வீடு தேடி ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்; உறுதிப்படுத்த முகப்பதிவு முறை அமல்
ADDED : ஜூலை 18, 2025 11:37 PM
திருப்பூர்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வீடு தேடி ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்ய, முகப்பதிவு முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடிகளில், 2 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பராமரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்துக்கு முந்தைய, பிந்தைய ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இதில், மத்திய அரசின் பங்களிப்புடன், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 முதல், 6 வயதுள்ள குழந்தை களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, வீடு தோறும் சென்று சத்துமாவு கலவை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இப்பணியை மேற்கொள்கின்றனர். பயனாளிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அங்கன்வாடி பணியாளர்கள், ஆவணங்களில் பதிவு செய்து, பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், தகுதியுள்ள அனைவருக்கும் சத்துமாவு கலவை கிடைப்பதை உறுதிசெய்ய, மொபைல்போனில் அதற்கென வழங்கப்பட்டுள்ள செயலியில், பயனாளி களின் முகப்பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு அரசின் திட்டம் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இம்முறை அமல்படுத்தப்பட்டாலும், சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக, அங்கன்வாடி பணியாளர்கள் கூறி வருகின்றனர்.
கட்டமைப்பு இல்லை
தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற பேரவை மாநில பொது செயலர் வேலுசாமி கூறியதாவது; சத்துமாவு பெறும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் முகப்பதிவு செய்வதுடன், அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து, பயனாளி களின் மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை உறுதி செய்து, 'இ-கேஒய்சி.,' எனப்படும் எலக்ட்ரானிக் முறையில் விவரம் பதிவு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என, மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கென தனியாக மொபைல்போன்களை பெற்றோர் வைத்துக் கொள்வதில்லை. மாறாக, குழந்தையின் தந்தையின் மொபைல்போனுக்கு தான் ஓ.டி.பி., அனுப்பி வைக்கப்படுகிறது.
அவர்கள் வெளியூரிலோ அல்லது, பணியில் இருக்கும் போதோ, அழைப்பை ஏற்பதில்லை; இ-கேஒய்சி., பணி மேற்கெள்ள ஒத்துழைப்பு வழங்க முடியாத சூழலில் கூட அவர்கள் உள்ளனர்; இதனால், அந்த பணியை பாதியில் கைவிட வேண்டியுள்ளது.
மாநிலத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இப்பணியை மேற்கொள்ள அங்கன்வாடி பணியாளர்கள் தயாராக உள்ளனர். இருப்பினும், 17 ஆயிரத்து 856 அங்கன்வாடி பணியாளர்களுக்கு மட்டுமே இத்தகைய பணியை மேற்கொள்ள 'ஆன்ட்ராய்டு மொபைல்' போன் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 'மொபைல் போன்' வழங்க வேண்டி யுள்ளது. அவர்களிடம் உள்ள பழைய மொபைல் போன், 'அப்டேட்' செய்யப்படாத செயலி மற்றும் 'சிக்னல்' கிடைக்காதது;
காலியாக உள்ள பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் பணியில் தடுமாற்றம் தென்படுகிறது. இப்பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. படிப்படியாக பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என, முதல்வர் உறுதியளித்துள்ளார். அதன்படி, 7,783 காலிப் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

