ADDED : ஏப் 26, 2026 10:55 PM
திருப்பூர்:தேர்தல் பரபரப்பு, கொளுத்தும் வெயில் என இரட்டைத்தாக்குதலால், காதர்பேட்டையில் வர்த்தகம் மந்தமானது.
திருப்பூரின் அடையாளங்களில் ஒன்றான காதர்பேட்டை பின்னலாடை சந்தை, கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளில் வெளிமாநில மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் அண்டை மாவட்ட மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து ஆடைகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக, கொரோனாவுக்குப் பிறகு சில்லரை விற்பனை இங்கு களைகட்டி வந்தது.
ஆனால், தேர்தல் பரபரப்பு ஒருபுறம், சுட்டெரிக்கும் 100 டிகிரி வெயில் மறுபுறம் என இரட்டைத் தாக்குதலால் வாராந்திர விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. காலை முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றனர். இதனால் காதர்பேட்டை வீதிகள் ஆள் அரவமின்றிக் காணப்படுகின்றன. மாலை நேரங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஓரளவு வந்தாலும், வழக்கமான வியாபாரத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த அனலைச் சமாளிக்க மக்கள் மெல்லிய பருத்தி ஆடைகளைத் தேடி வருவதால், அந்த வகை ஆடைகளுக்கு மட்டும் ஓரளவுக்கு மவுசு கூடியுள்ளது. வெயில் தணிந்தால் மட்டுமே மீண்டும் காதர்பேட்டை பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எ
