ADDED : பிப் 01, 2024 05:49 AM

திருப்பூர் : தம்பதியரை கொடூரமாக கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 73. இவரது மனைவி தெய்வாத்தாள், 68. தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர். கடந்த, 2017 டிச., 29ம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள், இருவரையும் கட்டையால் அடித்து கொலை செய்து, 7 சவரன் நகைகள், மொபைல் போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.
அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து நாச்சிபாளையம் செந்தில் நகரை சேர்ந்த சித்திரைராஜா, 29, திருச்செந்துாரை சேர்ந்த சுயம்புலிங்கம், 41 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணத்தேவைக்காக இருவரும், முதிய தம்பதியை கொலை செய்து நகையை திருடியது தெரிந்தது.
வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு, இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.