ADDED : செப் 29, 2026 08:01 PM
உடுமலை: உடுமலை நகராட்சி பகுதியில், மழை வெள்ள நீர் வெளியேறும் வகையில், இயற்கையாக அமைந்துள்ள ஓடைகளை வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரும் பணிகள் துவங்கியுள்ளன.
உடுமலை நகராட்சி பகுதிகளில் பெய்யும் மழை நீர், எளிதாக வெளியேறும் வகையில், இயற்கை நீர் வழித்தடங்களாக, தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், நாராயணன் காலனி ஓடை, நெடுஞ்செழியன் காலனி ஓடை, ராஜவாய்க்கால் பள்ளம் இயற்கை நீர் வழித்தடங்களாக அமைந்துள்ளன.
வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த, ஓடைகள் மீதான மக்களின் அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது, நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.
வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடுமலை நகராட்சி சார்பில், ஓடைகள் துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
நேற்று, கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில், அகழ்வு இயந்திரம் வாயிலாக, துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பிற ஓடைகள் துார்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
