/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை குறைக்க 'பஸ் பே' தேவை; வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
/
நெரிசலை குறைக்க 'பஸ் பே' தேவை; வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
நெரிசலை குறைக்க 'பஸ் பே' தேவை; வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
நெரிசலை குறைக்க 'பஸ் பே' தேவை; வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2025 08:14 PM
உடுமலை; நகரப்பகுதியில், ஏற்படும் நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட பகுதிகளில், நெடுஞ்சாலையில், 'பஸ் பே' அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் உட்பட முக்கிய பகுதிகள் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த ரோட்டை ஒட்டி, நகர எல்லையில், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரி என கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாத அளவுக்கு, நெரிசல் காணப்படுகிறது.
இதற்கு, தேசிய நெடுஞ்சாலையிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றி, இறக்குவது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குறுகலான ரோட்டில், பஸ்கள் இருபுறமும் நிற்கும் போது, பிற வாகனங்கள், விலகிச்செல்ல முடிவதில்லை. இதனால், ஒரு பஸ் நிற்கும் போது, பின்னால், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பின்னர், அவசரகதியில், வாகனங்கள் முந்திச்செல்லும் போது, ரோட்டை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. நடந்து செல்பவர்களுக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதையும் காட்சிப்பொருளாக மாறி விட்டது.
இத்தகைய நெரிசல் மிகுந்த பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பஸ்கள் நிறுத்துவதற்கான தனியாக 'பஸ் பே', எனப்படும் இடத்தை ஒதுக்கீடு செய்ய சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தி, ரோட்டோரத்தில், அதற்கான குறியீடுகளையும், அமைத்தால், பஸ்கள் நிற்கும் போது, தேசிய நெடுஞ்சாலையில், பிற வாகனங்கள் தடையில்லாமல் செல்லும்.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சில மாதங்களுக்கு முன், சிறிய தடுப்புகள் அமைத்து இத்தகைய முயற்சிகள் மேற்கொண்டனர். சிறிது காலத்தில் அத்தடுப்புகளும் அகற்றப்பட்டு விட்டது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.