ADDED : மார் 14, 2026 06:10 AM
திருப்பூர்: கோடை பருவம் துவங்கும் முன்னரே, பவானி ஆறுக்கு, நீர் வரத்து வெகுவாக குறைந்திருக்கிறது. இதே நிலை நீடித்தால் வறட்சி காலத்தில், குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பில்லுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர், பவானி ஆறு வழியாக, பவானிசாகர் அணைக்கு செல்கிறது.
கோவை, திருப்பூர் மாநகராட்சிகள், மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிகள், சிறுமுகை, அன்னுார், அவிநாசி, சூலுார் உள்ளிட்ட, 19 குடிநீர் திட்டங்களுக்கு, தினமும் பல கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக, பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பில்லுார் அணைக்கு நீர் வரத்து இல்லாததால், பவானி ஆற்றிலும் நீர் வரத்து குறைந்திருக்கிறது. கோடை சீசன் துவங்கும் முன்பே, பவானி ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால், ஆற்று நீரை நம்பியுள்ள, குடிநீர் திட்டங்களுக்கு நீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், தற்போது வரை சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், சீரான இடைவெளியில் மக்களுக்கு நீர் வினியோகம் செய்ய வேண்டும் என, தமிழக அரசின் சார்பில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
