UPDATED : ஆக 16, 2026 06:51 PM
ADDED : ஆக 16, 2026 06:42 PM
பல்லடம்:பல்லடம் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் கோரும் இயக்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் இளங்கோவன் பேசியதாவது:
பல்லடம் வறட்சி மிகுந்த பகுதி. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், உணவுப் பாதுகாப்பும் கழிவுநீரை சுத்திகரிப்பதும் முக்கியம். மழைநீர் பூமிக்குள் இறங்க வழியில்லாமல், கான்கிரீட் கால்வாய்கள் வழியாக வெள்ளமாக வெளியேறுகிறது.
நொய்யலில் செல்லும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த முடியும். மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்தால், துர்நாற்றமில்லாத பயன்படுத்தக்கூடிய நீராக மாற்றலாம். நொய்யலை சார்ந்துள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்களில் இன்றும் தண்ணீர் உள்ளது.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஓராண்டுக்குள் செயல்படுத்த முடியும். இதன் மூலம் தினமும் அரை டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதுார் பகுதிகளில் இருந்து வடசித்துார், கேத்தனுார் பகுதிகளுக்கு ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் செல்கிறது. இதுபோன்ற திட்டங்களை தமிழகத்தின் பல பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் கிடைத்தால் நல்லதுதான். ஆனால், இன்றைய பசிக்கு இன்றே உணவு தேவை. அதற்கு கழிவுநீரை சுத்திகரிப்பதே சிறந்த தீர்வு. தொழில் துறையினர், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் இணைந்து முயற்சித்தால், வறட்சியான பல்லடத்தை வளர்ச்சி மிகுந்த பகுதியாக மாற்ற முடியும்.
பல்லடத்தின் நிலத்தடி நீரை செறிவூட்ட, நொய்யலில் செல்லும் உபரி நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தலாம். தொழில் துறையினரும் தன்னார்வலர்களும் முன்வந்தால், இதை விரைவாக செயல்படுத்த முடியும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளையும் அரசு நினைத்தால் அகற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
