/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டன் கணக்கில் 'கலவை உப்பு' தீர்வு தேடும் சாய ஆலைகள்
/
டன் கணக்கில் 'கலவை உப்பு' தீர்வு தேடும் சாய ஆலைகள்
டன் கணக்கில் 'கலவை உப்பு' தீர்வு தேடும் சாய ஆலைகள்
டன் கணக்கில் 'கலவை உப்பு' தீர்வு தேடும் சாய ஆலைகள்
ADDED : பிப் 20, 2025 06:10 AM

திருப்பூர்; திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில் குவியும் 'மிக்சர் சால்ட்' எனப்படும் கலவை உப்புப் பிரச்னைக்குத் தீர்வு காண சாய ஆலைகள் தீவிரம் காட்டுகின்றன.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தலைவர் காந்தி ராஜன் தலைமையில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன், துணை தலைவர் ஈஸ்வரன், இணை செயலாளர்கள் சுதாகர், செந்தில்குமார் ஆகியோர், 'மிக்சர் சால்ட்' கழிவை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
சங்க தலைவர் கூறியதாவது:
திருப்பூரில், 350 சாய ஆலைகள் மூலம், பொது சுத்திகரிப்பு நிலையமும், 62 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கி வருகின்றன. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், தினமும், 10 கோடி லிட்டர் கழிவுநீர், சுத்தமாக தண்ணீராக பிரித்து எடுத்து, மறுபயன்பாடு செய்யப்படுகிறது.
சுத்திகரிப்பு பணிக்காக, மாதம், 35 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. சுத்திகரிப்பின் நிறைவாக வரும், உயிரி மற்றும் ரசாயன 'ஸ்லெட்ஜ்' கழிவுகளை பாதுகாப்பாக வைத்திருந்து, சிமென்ட் ஆலைகளுக்கு, டன் ஒன்றுக்கு, 7000 ரூபாய் செலவு செய்து, அனுப்பி வைக்கப்படுகிறது.
மாசுக்கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பில், கழிவுகள் அகற்றப்படுகின்றன. சுத்திகரிப்பு திட்டத்தால், நிலத்தடி நீரை எடுப்பது குறைந்துவிட்டது; மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், தண்ணீர் கொள்முதல் செய்வதும் குறைந்துவிட்டது.
தற்போது, 1:3 என்ற விகிதத்தில், துணியையும், தண்ணீரையும் பயன்படுத்தி சாயமிட்டு வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் இயங்கும் இத்தொழிலில், சிரமங்கள் குறைந்தபாடில்லை.
'ஆன்லைன்' மூலம் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது; பொது சுத்திகரிப்பு நிலையங்களில், 99 சதவீதம் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.
ஒரத்துப்பாளையம் அடுத்துள்ள சின்னமுத்துார் அணையில் இருந்து பல ஆண்டுகளுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தற்போது, 99 சதவீதம் சுத்தமான உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது; நீண்ட நாட்களாக தேங்கியுள்ள 'மிக்சர் சால்ட்' கழிவுகள், அரசு வழிகாட்டுதலின்படி அப்புறப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஐ.ஐ.டி., துணையுடன் தொழில்நுட்பம்
''சாய கழிவுநீர் சுத்திகரிப்பின் நிறைவாக,'மிக்சர் சால்ட்' என்ற கலவை உப்பும் கிடைக்கிறது; தரமான உப்பு, மீண்டும் பயன்பாட்டுக்கு எடுக்கப்படுகிறது; அடர்கலவை உப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல; அவற்றை, பாதுகாப்பான அறைகளில் வைத்துள்ளோம். திருப்பூரில், ஒரு லட்சம் டன் அளவுக்கு,'மிக்சர் சால்ட்' தேக்கமடைந்துள்ளது. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம், ஐ.ஐ.டி., மூலம், அவற்றை அப்புறப்படுத்தும் தொழில்நுட்பம் கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது'' என்றார் சாய ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் காந்திராஜன்.

