/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றத்துக்கு தயாராகும் சாய ஆலைகள்: முதலீட்டு மானிய திட்டம் கைகொடுக்கும்
/
மாற்றத்துக்கு தயாராகும் சாய ஆலைகள்: முதலீட்டு மானிய திட்டம் கைகொடுக்கும்
மாற்றத்துக்கு தயாராகும் சாய ஆலைகள்: முதலீட்டு மானிய திட்டம் கைகொடுக்கும்
மாற்றத்துக்கு தயாராகும் சாய ஆலைகள்: முதலீட்டு மானிய திட்டம் கைகொடுக்கும்
ADDED : அக் 26, 2025 03:09 AM
தமிழக அரசின், 25 சதவீத மானியத்துடன் கூடிய முதலீட்டு மானிய திட்டத்தால், திருப்பூர் சாய ஆலைகளின், தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவை குறைக்கும் தொழில்நுட்பம் நிறுவப்படும் என, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் இன்று உலகம் முழுவதும் கொடிகட்ட பறக்க பெரிதும் காரணம். நேர்த்தியான சாயமிடல் தொழில்நுட்பம். உள்ளூரில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை உணராமல் சில காலம் வரை, சாயத்தொழில் இஷ்டம் போல் இயங்கியது. அதற்கு பிறகு, கோர்ட் வழிகாட்டுதலின்படி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது.
ரூ.1,200 கோடி முதலீடு
கடந்த, 2009ம் ஆண்டு முதல், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய இத்தொழில்நுட்பத்தை நிறுவும் பணி துவங்கியது. மொத்தம் உள்ள, 380 சாய ஆலைகள் இணைந்து, 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, அதில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை நிறுவனர்.
தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைக்காததால், 2010ம் ஆண்டு இறுதியில், சாயத்தொழில் சிரமத்தில் சிக்கியது; கோர்ட் உத்தரவுப்படி, ஒட்டுமொத்த சாயத்தொழிலும் மூடப்பட்டது; 2011 சட்டசபை தேர்தல், திருப்பூரில் சாயத்தொழிலை மையமாக கொண்டே இயங்கியது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 200 கோடிரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கி, தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கப்பட்டது; பிறகு நிலைமை சீரானது.
'அப்டேட்' ஆகாத சாய ஆலைகள்
அதற்கு பிறகும்,சாய ஆலைகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளையே அனைவரும் கண்காணித்தனர். புதிய இயந்திரங்களால் மேம்படுத்தப்பட்ட சாய ஆலைகளுக்கு, தண்ணீர் பயன்பாடு மட்டும் குறைந்தது; மின்சார பயன்பாடு மற்றும் எரிபொருள் பயன்பாடு அதிகரித்தது. உற்பத்தி செலவு பலமடங்கு அதிகரித்தாலும், பொது சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைந்து, சாய ஆலைகள் இயங்கி வருகின்றன.
கடந்த, 10 ஆண்டுகளாக, தொழிலை மேம்படுத்த யாருமே தயாரில்லை. தற்போது, தமிழக அரசின் முதலீட்டு மானிய திட்டத்தின் மூலமாக, நான்கு கோடி ரூபாய் வரை மேம்பாடு செய்யவும், ஐந்து கோடி ரூபாய்க்கு புதிய யூனிட் துவக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. குறிப்பாக, 25 சதவீத மானியத்துடன் கூடிய திட்டம் கனிந்து வந்துள்ளதால், சாய ஆலைகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படும் வாய்ப்பும் நெருங்கி வந்துள்ளது.
புதிய திட்டத்தால் புத்துயிர்
தமிழக அரசு ஜவுளி தொழில் கொள்கையை சீரமைப்பு செய்து, முதலீட்டு மானிய திட்டத்தை அறிவித்துள்ளது.
புதிதாக தொழில் துவங்கும் 'கிரீன் பீல்டு' வகைக்கு, 20 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். விரிவாக்கம் செய்யும் 'பிரவுன் பீல்டு' நிறுவனங்களுக்கு, 15 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
மதிப்பெண் அடிப்படிடையில், தான் மானியம் கிடைக்கும் என்று கூறியிருந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசிடம், சாய ஆலை உரிமையாளர்கள் விரிவாக கோரிக்கை வைத்திருந்தனர். முதலீட்டு உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 1 முதல் 5 கோடி ரூபாய், 5 முதல் 10 கோடி ரூபாய், 10 முதல் 15 கோடி ரூபாய் என்று முதலீடு வகைப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு முதலீடு செய்தாலும், அதற்கு ஏற்ப, 25 சதவீத மானியத்தை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பசுமை தொழில்நுட்ப அங்கீகாரம்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, சாய ஆலைகள் பெரும் பொருட்செலவில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்துகின்றன. இங்குள்ள ஆலைகளில் சாயமிட்டால், சம்பந்தப்பட்ட ஆடை உற்பத்தியாளர்களுக்கு, 'பசுமை ஆடை' என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. நமது நாட்டிலேயே, திருப்பூரில் மட்டும்தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது; எனவே, மத்திய, மாநில அரசுகள், திருப்பூர் சாயத்தொழிலுக்கு தனி பசுமை அங்கீகாரம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மின் கட்டணம் மற்றும் சோலார் கட்டமைப்பு நிறுவ அதிகபட்ச மானியம் வழங்கியும் ஊக்குவிக்க வேண்டும்.

